தலைமறைவாக இருந்த பிரபல BIKER TTF வாசன் கோர்ட்டில் சரண் : 7 மணி நேர காத்திருப்புக்கு பின் நீதிமன்றம் பரபர உத்தரவு.!!
Author: Udayachandran RadhaKrishnan27 September 2022, 12:58 pm
பைக்கர் டி.டி.எப்.வாசன் மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.
காலை முதல் மாலை வரை நீதிமன்றத்தில் இருந்த வாசன் மாலையில் இரண்டு நபர்களின் உத்தரவாதத்தை அளித்த பின் ஜாமினில் விடுவிக்கப்பட்டார்.
கோவையில் கடந்த சில நாட்களுக்கு முன் பைக்கர் டிடிஎப்.வாசன் என்பவர்
யூடியூபர் ஜி.பி.முத்து என்பவரை தனது இரு சக்கர வாகனத்தில் அமர வைத்து சுமார் 150 கிலோ மீட்டர் வேகத்தில் வாகனத்தை ஓட்டிய வீடியோ ஒன்றை வெளியிட்டார்.
இந்நிலையில் அவர் மீது போத்தனூர் மற்றும் சூலூர் காவல் நிலையங்களில் தலா இரண்டு வழக்குகள் பதிவு செய்யப்பட்டது. போலீசார் டிடிஎப். வாசனை தேடி வந்த நிலையில், நேற்று மதுக்கரை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதிமன்ற நீதிபதி சரவணன் முன்பு அவர் சரணடைந்தார்.
இதனையடுத்து நேற்று காலை 10.30 மணிக்கு சரணடைந்த வாசன் மாலை 5.30 வரை நீதிமன்ற கூண்டில் அமர்ந்திருந்தார். இரண்டு நபர்களின் உத்தரவாதம் கொடுத்த பின் மாலையில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
போத்தனூர் வழக்கில் சரணடைந்த நிலையில், சூலூர் காவல் நிலையத்தில் பதியப்பட்ட வழக்கில் வருகின்ற வெள்ளிக்கிழமை டிடிஎப். வாசன் ஆஜராக இருப்பதாக காவல் துறை வட்டாரம் தகவல் கூறப்படுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
டிடிஎப் வாசன் மீது போத்தனூர் காவல் துறையினர் 2 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். டிடிஎப் வாசன் மீது சூலூர் காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது
இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் பொது இடத்தில் அஜாக்கிரதையாக வாகனம் ஓட்டுதல் என்ற பிரிவிலும், மோட்டார் வாகன சட்டப்படி பில்லியன் ரைடர் ஹெல்மெட் அணியாதது, ஆபத்தை விளைவிக்கும் வகையில் வாகனம் ஓட்டுதல் ஆகிய 2 பிரிவு என மொத்தம் 3 பிரிவுகளில் டிடிஎப் வாசன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.