பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவுக்கு தடை : மீண்டும் பதற்றம்.. கோவையில் போலீசார் குவிப்பு..!!
Author: Babu Lakshmanan28 September 2022, 10:31 am
கோவை : பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா (பி.எஃப்.ஐ ) அமைப்புக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதை தொடர்ந்து, கோவையின் பல்வேறு இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
இந்தியா முழுவதும் கடந்த வாரம் பிஎஃப்ஐ அமைப்புக்குச் சொந்தமான இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. இதில் தமிழகத்திலிருந்து 11 பேரையும் இந்தியா முழுவதும் 247 பேரையும் தேசிய புலனாய்வு முகமை கைது செய்துள்ளது.
இதனிடையே கோவையின் பல்வேறு இடங்களில் பா.ஜ.க மற்றும் இந்து அமைப்பு அலுவலகங்கள் மற்றும் வாகனங்கள் மீது பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டன. இதனால், கோவை முழுவதும் பதற்றம் நீடித்தது. இதனிடையே, பி.எஃப்.ஐ அமைப்புக்கு 5 ஆண்டுகள் தடை விதித்துள்ளது மத்திய அரசு. பி.எஃப்.ஐ-யின் துணை அமைப்புகளுக்கும் இந்த தடை பொருந்தும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.
பி.எஃப்.ஐ அமைப்பிற்கு விதிக்கப்பட்ட தடை உடனடியாக அமலுக்கு வருவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. இது பி.எஃப்.ஐ அமைப்பினரிடையே கொதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய அரசு தொடர்ந்து சிறுபான்மை இன மக்களை வஞ்சிக்கும் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
பி.எஃப்.ஐ அமைப்புக்குத் தடை விதிக்கப்பட்டுள்ள இந்த சூழலில், கோவையில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். டவுன்ஹால், உக்கடம், காந்திபுரம் உள்ளிட்ட கோவையின் முக்கிய இடங்களில் போலீசார் ரோந்து பணியை மேற்கொண்டு வருகின்றனர்.கோவையில் பதற்ற நிலை சற்றே தணிந்திருந்த நிலையில், தற்போது மீண்டும் பரபரப்பான சூழல் ஏற்பட்டுள்ளது.