‘பஸ்ஸே எங்க காசுலத்தான் வாங்குனீங்க.. நாங்க ஒன்னும் ஓசியில போகல’… அமைச்சர் பொன்முடிக்கு சீமான் பதிலடி..!!
Author: Babu Lakshmanan28 September 2022, 4:44 pm
சென்னை : பெண்கள் பேருந்துகளில் ஓசியில் பயணம் செய்வதாக அமைச்சர் பொன்முடி பேசிய கருத்திற்கு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் பதிலடி கொடுத்துள்ளார்.
அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்.” எனக் கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒரு பகுதியாக நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் கடும் தெரிவித்துள்ளார்.
தனியார் மயத்தை எதிர்த்து தபால்த்துறை ஊழியர்கள் சென்னையில் நடத்தி வரும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்த சீமான், அப்போது செய்தியாளர்களிடம் பேசினார். அவர் பேசியதாவது :- இரண்டரை கோடி லட்சம் கோடி கடன் வைத்திருக்கிறார் அதானி. அவரைப்போய் உலகப்பணக்காரர் என்கிறார்கள். இது ஒரு கொடுமை. சொந்த நாட்டு மக்களை பிச்சைக்காரர்களாக வைத்திருப்பது தான் இந்த நாடு ஏற்றுக்கொண்ட பொருளாதாரக் கொள்கை. இது தான் இவர்களின் ஆட்சிமுறை. அரசு பஸ்சே எங்களின் வரி பணத்தில் தான் வாங்கியுள்ளீர்கள். உங்கள் பணத்தில் வாங்கவில்லை. பஸ்சில் பெண்கள் ஓசியில் பயணம் செய்யவில்லை, எனக் கூறினார்.