‘ஓசியில வரமாட்டேன்… காசு வாங்கிட்டு டிக்கெட்ட கொடு’.. அமைச்சர் பொன்முடியின் பேச்சால் அரசுப் பேருந்தில் தன்மானம் காட்டிய பாட்டி..!!
Author: Babu Lakshmanan29 September 2022, 12:55 pm
அரசுப் பேருந்தில் மூதாட்டி ஒருவர் இலவசப் பேருந்து எனக்கு வேண்டாம் எனக் கூறி பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கி பயணித்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அண்மையில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் தமிழக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி கலந்து கொண்டு பேசிய வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. அந்த வீடியோவில், “உங்கள் குடும்ப அட்டைக்கு ரூ.4 ஆயிரம் கொடுத்தாரா? இல்லையா? வாங்கினீர்களா? வாயை திறந்து சொல்லுங்கள். இப்போது பேருந்தில் எப்படி செல்கிறீர்கள்? இங்கிருந்து கோயம்பேடு செல்ல வேண்டும் என்றாலும், வேறு எங்கு சென்றாலும் ஓசி பஸ்ஸில் போகிறீர்கள்.” எனக் கூறினார்.
அவரது இந்தப் பேச்சுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், பொதுமக்களும் சமூக வலைதளங்களில் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், அரசு இலவசப் பேருந்தில் பயணித்த மூதாட்டி ஒருவர், “எனக்கு ஓசி பபயணம் எல்லாம் வேண்டாம், காசு வாங்கிட்டு டிக்கெட்ட கொடு,” என நடத்துநரிடம் தன்மானத்துடன் பேசியுள்ளார். அதற்கு நடத்துநர் பணத்தை வாங்க மறுத்து, டிக்கெட்டை வாங்கிக் கொள்ளும்படி கூறுகிறார். ஆனால், பாட்டி பிடிவாதமாக ஓசியில நான் போக மாட்டேன் எனக் கூறுகிறார்.
அப்போது, பேருந்தில் இருந்தவர்கள், அனைத்து பெண்களும் இலவசமாகத்தானே போகிறார்கள், பேசாமல் நீங்களும் டிக்கெட்டை வாங்கிக் கொள்ளுங்கள் எனக் கூறுகின்றனர். இதனால், உணர்ச்சி பொங்கிய அந்த மூதாட்டி, தமிழகமே ஓசியில போனாலும், நான் போகமாட்டேன் எனக் கூறுகிறார். இறுதியில், மூதாட்டியிடம் பணத்தை பெற்றுக் கொண்டு, நடத்துநர் டிக்கெட்டை கொடுத்துள்ளார். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
பெண்கள் ஓசியில் செல்வதாக அமைச்சர் பொன்முடி கூறிய நிலையில், மூதாட்டி ஒருவர் இலவசத்தை மறுத்து பணத்தை கொடுத்து டிக்கெட் வாங்கிச் செல்வதைக் காணும் போது, பெண்களிடையே அமைச்சரின் பேச்சு கொந்தளிப்பை ஏற்படுத்தி இருப்பதை காண முடிகிறது என்கின்றனர் சமூக ஆர்வலர்கள்.