வனத்துறையை தாக்கி தப்பிய சிறுத்தை மர்ம மரணம்? அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அடக்கம்.. வன உயிரின ஆர்வலர்கள் புகார்!!
Author: Udayachandran RadhaKrishnan29 September 2022, 4:00 pm
வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை அதே பகுதியில் உயிரிழப்பு. சிறுத்தையின் உயிரிழப்பில் மர்மம் மூடி மறைக்கும் வனத்துறையினர்.
தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே உள்ள லட்சுமிபுரம் தேனி வனக்கோட்ட வனப்பகுதியான சொர்க்கம் கோம்பை வனப்பகுதியில் நேற்று முன்தினம் வனத்துறையின் மூலம் அமைக்கப்பட்ட சோலார் மின் வேலியில் சிறுத்தை சிக்கி உயிருடன் இருப்பதாக அப்பகுதியில் உள்ள விவசாயிகள் வனத்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சிறுத்தையினை உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரன் மற்றும் வனப் பணியாளர்களுடன் உயிருடன் மீட்க்கும் பணியில் ஈடுபடும் போது சிறுத்தை சோலார் கம்பி வேலியில் இருந்து தானாக தப்பிய நிலையில் உதவி வனப்பாதுகாவலர் மகேந்திரனின் கையை கடித்து தாக்கி விட்டு சிறுத்தை அருகே உள்ள வனப்பகுதிக்குள் தப்பி சென்று விட்டதாக வனத்துறை தெரிவித்தனர்.
இந்நிலையில் வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை மீண்டும் பழுதடைந்த சோலார் மின்வெளியில் சிக்கிய நிலையில் நேற்று மாலை உயிரிழந்ததாக கூறி வனத்துறையினர் கால்நடை மருத்துவர் கொண்டு அவசர அவசரமாக உயிரிழந்த சிறுத்தையை பிரேத பரிசோதனை செய்து அந்தப் பகுதியிலேயே அடக்கம் செய்துள்ளனர்.
மேலும் வனத்துறை அதிகாரியை தாக்கிய சிறுத்தை மறுநாள் அதே பகுதியில் உயிரிழந்து இருப்பது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில் வனத்துறை அதிகாரியை சிறுத்தை தாக்கிய போதே வனத்துறை அதிகாரியை காப்பாற்றுவதற்காக வனத்துறை ஊழியர்களே சிறுத்தையை தாக்கியதில் சிறுத்தை உயிரிழந்துள்ளதா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
மேலும் சிறுத்தை வனத்துறை அதிகாரியை தாக்கிய சம்பவத்தையும் செய்தியாளர்களிடம் தெரிவிக்காமல் மூடி மறைத்ததோடு, தற்பொழுது சிறுத்தை உயிரிழந்த சம்பவத்தையும் அவசர அவசரமாக பிரேத பரிசோதனை செய்து அடக்கம் செய்துள்ளதும், வனத்துறை அதிகாரியை தாக்கி விட்டு தப்பி ஓடியது சிறுத்தை மீண்டும் அதே சோலார் மின் வேளியில் உயிரிழந்த சம்பவம் வன உயிரின ஆர்வலர்களிடையே பெரும் அதிர்ச்சியையும் சந்தேகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.
சிறுத்தையின் இறப்பில் உள்ள மர்மத்தை தேனி வனத்துறை அதிகாரி உரிய விசாரணை நடத்தி வனவிலங்குகளை காப்பாற்ற வேண்டும் என்பதே வன உயிரின ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.