கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் எனும் புதிய விதிமுறை ஒத்திவைப்பு ; மீண்டும் எப்போது நடைமுறைக்கு வரும் தேதியையும் அறிவித்தது மத்திய அரசு!!
Author: Babu Lakshmanan29 September 2022, 8:52 pm
இந்தியாவில் கார்களில் 6 ஏர்பேக்குகள் கட்டாயம் எனும் புதிய பாதுகாப்பு விதிமுறை தற்போது ஒத்திவைப்பதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.
இந்தியாவில் 8 பேர் வரை பயணிக்கும் கார் உள்ளிட்ட மோட்டார் வாகனங்களில் பயணிப்போரின் பாதுகாப்பை மேம்படுத்தும் விதமாக, அந்த வாகனங்களில் குறைந்தபட்சம் 6 ஏர்பேக்குகளை கட்டாயமாக்கவதற்கு புதிய பாதுகாப்பு விதிமுறை கொண்டு வரப்பட்டது. அதில், 2022ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட M1 வகையைச் சேர்ந்த அனைத்து வாகனங்களுக்கும் 6 ஏர்பேக்குகள் பொருத்தப்படுவது கட்டாயம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த புதிய வரைவு அறிவிப்புக்கு மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி ஒப்புதலும் அளித்தார். இதையடுத்து, இந்த புதிய விதிமுறை அக்டோபர் 1ம் தேதி முதல் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்திருந்தது.
இந்த நிலையில், 6 ஏர்பேக் கட்டாயம் என்ற புதிய பாதுகாப்பு விதியை அமல்படுத்துவதை அடுத்த ஆண்டு அக்டோபர் வரை ஒத்திவைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இது தொடர்பாக போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி வெளியிட்டுள்ள அறிவிப்பில், ஆட்டோமொபைல் துறை எதிர்கொள்ளும் உலகளாவிய விநியோகச் சங்கிலி தடைகள் மற்றும் மேக்ரோ பொருளாதார சூழ்நிலையில் அதன் தாக்கத்தை கருத்தில் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டிருப்பதாகவும், புதிய விதிமுறை 2023ம் ஆண்டு அக்டோபர் 1ம் தேதி நடைமுறைக்கு வரும், எனக் குறிப்பிட்டுள்ளார்.