கோவையில் மகாத்மா காந்தி தங்கிய இல்லம் நினைவகமாக மாற்றம் : பொதுமக்களும் பார்வையிடலாம் என அறிவிப்பு!!

Author: Udayachandran RadhaKrishnan
30 September 2022, 2:00 pm

கோவையில் மகாத்மா காந்தியடிகள் தங்கியிருந்த ஜி.டி.நாயுடு குடும்ப இல்லம் மகாத்மா காந்தி நினைவகமாக மாற்றப்பட்டு அவரின் 153-வது பிறந்த நாளில் (ஞாயிற்றுக்கிழமை) திறக்கப்படுகிறது.

இந்த நினைவகத்தை காந்திய ஆர்வலரும், பத்ம பூஷண் விருதாளருமான கிருஷ்ணம்மாள் ஜெகந்நாதன் திறந்துவைக்கிறார் நிகழ்ச்சிக்கு, நினைவகத் தலைவா் பி.கே.கிருஷ்ணராஜ் வாணவராயர் தலைமை வகிக்கிறாா். ஜி.டி. குழும நிறுவனங்களின் தலைவா் ஜி.டி.கோபால், ராமகிருஷ்ண மிஷன் வித்யாலய நிர்வாகி சுவாமி நிர்மலேஷானந்தர் ஆகியோர் பங்கேற்கின்றனர்.

மகாத்மா காந்தியடிகள் பல்வேறு நிகழ்ச்சிகள், கூட்டங்களில் பங்கேற்பதற்காக அவரது வாழ்நாளில் மூன்று முறை கோவைக்கு வந்துள்ளார். அதன்படி, 1934-ம் ஆண்டு கோவைக்கு வந்த மகாத்மா காந்தியடிகள் போத்தனூரில் உள்ள ஜி.டி.நாயுடுவின் குடும்ப இல்லத்தில் இரண்டு நாள்கள் (பிப்ரவரி 6, 7) தங்கியுள்ளார். தற்போது இந்த இல்லம் ஜி.டி. நாயுடு குழுமம் சார்பில் மகாத்மா காந்தி நினைவகமாக மாற்றப்பட்டுள்ளது.

காந்தி நினைவகத்தில் மகாத்மா காந்திக்கும், கோவைக்கும் உள்ள தொடா்பை பிரதிபலிக்கும் வகையில் பல்வேறு வகையான புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கு தங்கியிருந்தபோது அவர் பயன்படுத்திய காலணிகள், ராட்டை, தட்டு, டம்ளர், படுக்கை, அலமாரி உள்ளிட்ட பொருள்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. மேலும், மகாத்மா காந்தி பயன்படுத்திய கடிகாரம் உள்ளிட்ட பல்வேறு பொருள்களும் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

மகாத்மா காந்தியின் பிறப்பு முதல் இறப்பு வரை அவர் பங்கேற்ற நிகழ்வுகளின் புகைப்படங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மகாத்மாவின் செயல்பாடுகள் ஒளி-ஒலி வடிவத்தில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பு செய்யப்பட உள்ளது.

மகாத்மா காந்தியடிகள் படித்த, அவருக்கு விருப்பமான மற்றும் அவர் பற்றிய நூல்கள், அவரின் கடிதங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், காந்தியடிகளின் கொள்கையான கைத்தறி பொருள்கள் பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையில் சா்வோதய சங்கம் சார்பில் கைத்தறி பொருள்கள் விற்பனை செய்யவும், அது தொடர்பாக பயிற்சிகள் அளிக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

மகாத்மாவின் அஹிம்சை கொள்கை, சத்தியம், தர்மம் ஆகியவை குறித்து விவாதிக்கும் வகையில் உரையாடல் கூடம் அமைக்கப்பட்டுள்ளது.

  • Vijay Deverakonda and Rashmika Mandanna relationship ராஷ்மிகா போட்ட கண்டிஷன்..திருமணத்தை உதறிய விஜய் தேவரகொண்டா..!
  • Views: - 526

    0

    0