திமுக அரசு மீது மீண்டும் பாய்ந்த மார்க்சிஸ்ட்? கடும் அதிர்ச்சியில் CM ஸ்டாலின்!!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2022, 8:11 pm
சமீப காலமாகவே திமுக கூட்டணியில் இடம்பெற்றுள்ள மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்றும் ஒன்றாக இணைந்து மக்களின் பிரச்சினைகளுக்காக குரல் கொடுப்பது வாடிக்கையாக உள்ளது.
திமுகவுக்கு எதிராக கூட்டணி கட்சிகள்
குறிப்பாக, சொத்துவரி, மின் கட்டண உயர்வு, பரந்தூர் சர்வதேச விமான நிலையம் போன்ற ஒரு சில முக்கிய விவகாரங்களில் முதலமைச்சர் ஸ்டாலினுக்கு அறிவுரை கூறுவதுபோல கண்டனமும் தெரிவித்து வருகின்றன.
இதில் விசிக தலைவர் திருமாவளவனும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசனும் திமுக அரசின் தவறான நடவடிக்கைகளை தோழமையின் சுட்டுதல் போல மென்மையாகவே கண்டிக்கின்றனர். அதாவது வலிக்காமல் அடிக்கிற மாதிரி இவர்களுடைய அறிக்கைகள், பேட்டிகள் இருக்கும்.
மார்க்சிஸ்ட் கடும் எதிர்ப்பு
ஆனால் இதில் நேரடியாக இறங்கி அடிக்கும் கட்சியாக தமிழக மார்க்சிஸ்ட் செயல் படுவதை வெளிப்படையாக காண முடிகிறது. அதன் மாநில செயலாளர் கே. பாலகிருஷ்ணன் விடுக்கும் அறிக்கைகள் அனல் பறக்கும் விதமாக உள்ளன.
சில வாரங்களுக்கு முன்பு திமுக அரசு உயர்த்திய மின்கட்டணத்துக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்த பாலகிருஷ்ணன், திமுக ஆட்சிக்கு வந்தால் மாதம்தோறும் மின் கணக்கிடும் முறை நடைமுறைக்கு கொண்டுவரப்படும் என்று தேர்தல் வாக்குறுதி அளித்துவிட்டு அதற்கு மாறாக அனைத்து தரப்பு மக்களையும், சிறு-குறு தொழில்களையும் வெகுவாக பாதிக்கும் விதமாக மின் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. எனவே அதனை உடனடியாக திரும்பப் பெறவேண்டும்”என்று வலியுறுத்தியிருந்தார்.
முரசொலியில் கோபத்தை வெளிப்படுத்திய முதல்வர்
ஆனால் தேர்தல் வாக்குறுதியை சுட்டிக்காட்டி, மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் விடுத்த அறிக்கை முதலமைச்சர் ஸ்டாலினை எரிச்சலடைய வைத்தது, என்கிறார்கள். அது உண்மைதான் என்பதை உறுதி செய்வது போல திமுகவின் அதிகாரப்பூர்வ நாளேடான முரசொலியில் பாலகிருஷ்ணனை சாட்டையால் அடிப்பது
மாதிரி மறுநாளே ஒரு கட்டுரை வெளியிடப்பட்டது.
அதில், “திமுகவிற்கும் அதன் தோழமைக் கட்சிகளுக்குமிடையே சிண்டு முடிந்து, இந்த வலிமை மிகு கூட்டணியை முறித்துவிட சந்தர்ப்பம் கிடைக்காதா என நாக்கைத் தொங்கவிட்டு காத்துக் கொண்டிருக்கிறது ஒரு கூட்டம் என்பதை தோழர் பாலகிருஷ்ணன் அறியாதவர் அல்ல. வெறும் வாயை மென்று சுவைத்து ஜீரணித்து சுகம் காணும் அந்த வஞ்சகக் கூட்டத்தின் வாய்க்கு அவல் கிடைத்தால் என்னவாகும்?ஆகையால் நாம் விடும் அறிக்கைகள் எதிரிகள் வாய்க்கு அவலாகி விடாது எச்சரிக்கையாகச் செயல்படுவோம்’ என கோபத்தை கொப்பளித்து இருந்தது.
பாலகிருஷ்ணன் பகீர் குற்றச்சாட்டு
திமுக கூட்டணியில் ஏற்பட்ட இந்த சலசலப்பு அடங்குவதற்குள் மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன், திமுக அரசை கண்டிக்கும் விதமாக லாக்கப்பில் சென்னையை சேர்ந்த ஆகாஷ் என்ற இளைஞர் போலீசாரால் கடுமையாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டுள்ளார் என்ற பகீர் குற்றச்சாட்டை கூறி வேதனையுடன் அறிக்கை ஒன்றை தனது முகநூல் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.
அதில் கூறப்பட்டிருப்பதாவது: “ஆகாஷ் என்ற 21 வயது இளைஞரை, சென்னை, பெரம்பூர், ஓட்டேரி காவல்நிலையத்தைச் சார்ந்த காவலர்கள் விசாரணைக்கு செப்டம்பர் 21 அன்று அழைத்துச் சென்றுள்ளனர். அன்றிரவே ஆகாஷ் சுயநினைவு இழந்து கை, கால்கள் கட்டப்பட்டு ஏகாங்கிபுரம் ஏரிக்கரை ஓரமாக கவலைக்கிடமான நிலையில் கிடந்துள்ள தகவலை ஆகாஷின் பெற்றோருக்கு தெரியப்படுத்தியுள்ளனர்.
அதிர்ச்சியை ஏற்படுத்திய லாக்கப் மரணம்
உடனடியாக மிகவும் ஆபத்தான நிலையிலிருந்த ஆகாஷை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் சிகிச்சை பலனின்றி 29-ம் தேதி அவர் மரணமடைந்துள்ளார்.
இச்சம்பவம் மிகுந்த அதிர்ச்சியளிப்பதாக உள்ளது. காவல்துறையினர் கொடூரமாக இவரை தாக்கியது மட்டுமின்றி மரமணடையும் நிலையில் கூட அவரை மருத்துவமனையில் சேர்க்காமல் கை, கால்களை கட்டி ஏரிக்கரையில் வீசிச் சென்றது கொடூரத்தின் உச்சமாகும்.
கடும் கண்டனம்
மார்க்சிஸ்ட் சார்பில் இக்கொடூர கொலையினை வன்மையாக கண்டிப்பதுடன், கொலை வழக்குப் பதிவு செய்து, இம்மரணத்திற்கு காரணமான காவல்துறையினரை கைது செய்து குற்றவாளிக் கூண்டில் நிறுத்திட வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். மேலும், இவரது குடும்பத்திற்கு 50 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கிட வேண்டுமெனவும் கேட்டுக் கொள்கிறோம்.
தமிழகத்தில் லாக்கப் மரணங்கள் தொடர்கதையாகி வருவது காவல் நிலையத்திற்கு மக்கள் செல்வதற்கே அச்சப்படும் சூழ்நிலையை உருவாக்கிவிடும். தமிழக முதலமைச்சரும், காவல்துறை இயக்குநரும் இனி காவல்நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது என அறிவுறுத்திய பின்னரும் இத்தகைய மரணங்கள் தொடர்வது இத்துறையில் சிலர் கட்டுப்பாடுகளைப் பற்றி கவலைப்படாமல் செயல்படுவது வெளிப்படுகிறது. இதுகுறித்து அரசும், காவல்துறையும் உரிய ஆய்வுகளையும், நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டுமென்பதோடு, காவல்துறை சீர்திருத்தங்களை மக்களும், ஜனநாயக சக்திகளும் வற்புறுத்த முன்வர வேண்டுமென கேட்டுக் கொள்கிறோம்” என்று கண்டனம் தெரிவித்துள்ளார்.
4 தலைப்புகள்
வழக்கமாக தனது அறிக்கைகளில் நாளிதழ்கள், டிவி செய்தி சேனல்கள் பாணியில் ஓரிரு தலைப்புகளை மட்டும் பாலகிருஷ்ணன் வைப்பது வழக்கம். ஆனால் ஆகாஷ் லாக்கப் மரணத்திற்கு,
சென்னையில் லாக்கப் மரணம்!
மரணத்திற்கு காரணமான காவல்துறையினர் மீது
கொலை வழக்கு பதிவு செய்து கைது செய்திடுக!!
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தமிழக அரசுக்கு வலியுறுத்தல்!!!
என்று 4 தலைப்புகளை சூட்டியிருந்தது, இந்த லாக்கப் மரணத்தில் அவர் மிகுந்த கோபத்தை வெளிக்காட்டி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது.
லாக்கப் மரணம் பற்றி மார்க்சிஸ்ட் செயலாளர் பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கை திமுக அரசுக்கு பெரும் தலைவலியையும், குடைச்சலையும் கொடுக்கும் என்பதில் எந்த சந்தேகமும் இல்லை என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
ஏனென்றால் திமுக ஆட்சிக்கு வந்த பின்பு கடந்த 16 மாதங்களில் மட்டும் 12 பேர் போலீஸ் லாக்கப்பில் மரணமடைந்துள்ளனர்.
இதற்கு பெரும்பாலும் போலீசார் கூறிய காரணங்கள் வலிப்பு நோய் ஏற்பட்டு கைதிகள் திடீரென மரணம் அடைந்துவிட்டனர் என்பதுதான். ஆனால் சிலருடைய மரணங்கள் வலிப்பு நோயால் வந்தது அல்ல என்பதும் பிரேத பரிசோதனைக்கு பின்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
அப்போ போராட்டம், இப்போ சைலண்ட்
இரண்டு வருடங்களுக்கு முன்பு சாத்தான்குளத்தில் செல்போன் கடை நடத்தி வந்த தந்தையும் மகனுமான ஜெயராஜ், பென்னிக்ஸ் இருவரும் போலீஸ் லாக்கப்பில் கொடூரமாக அடித்துக் கொல்லப்பட்டபோது அதற்கு எதிராக திமுக போலவே மார்க்சிஸ்ட் கட்சியும் கடும் எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் அதிமுக அரசுக்கு எதிராக தீவிர போராட்டங்களை முன்னெடுத்தது.
ஆனால் திமுக ஆட்சிக்கு வந்தபிறகு, முன்பு எப்போதையும் விட போலீஸ் லாக்கப்பில் கைதிகள் மரணமடைவது அதிகரித்து வருவது மார்க்சிஸ்ட் கட்சியை எரிச்சலடைய வைத்திருக்கலாம்.
இதில் அதிமுக ஆட்சிக் காலத்தையும் திமுகவின் 16 மாத ஆட்சியையும் பாலகிருஷ்ணன் ஒப்பிட்டு பார்த்து இருப்பதற்கும் வாய்ப்பு உண்டு.
அதன் காரணமாகவும் அவர் தனது கோபத்தை மறைக்க முடியாமல் அறிக்கையில் வெளிப்படுத்தியிருக்கிறார் என்றே கருதத் தோன்றுகிறது.
முதலமைச்சரை குத்திக் காட்டிய அறிக்கை
அவருடைய அறிக்கையை கூர்ந்து படித்து பார்த்தால் இன்னொரு விஷயத்தையும் அவர் நாசூக்காக குத்திக் காட்டி இருப்பதும் தெரியும்.
தமிழக முதலமைச்சரும், காவல்துறை இயக்குநரும் இனி காவல் நிலைய மரணங்கள் இருக்கக் கூடாது என அறிவுறுத்திய பின்னரும் இத்தகைய மரணங்கள் தொடர்வது என்று குறிப்பிடுகிறார்.
அப்படியென்றால் லாக்கப் மரணங்கள் குறித்து காவல்துறையை
தனது முழு கட்டுப்பாட்டில் வைத்துள்ள முதலமைச்சர் ஸ்டாலினும், அவருடைய வழிகாட்டுதலின் பேரில் செயல்படும் டிஜிபியும் அக்கறையே காட்டுவதில்லை என்ற அர்த்தமும் தொனிக்கிறது.
கடந்த சில மாதங்களாகவே மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி ஆகிய மூன்றும் தாங்கள் எதிர்க்கும் விஷயத்தில் ஒன்றுபட்டு செயல்படுவதை பார்க்க முடிகிறது.
ஆதங்கப்பட்ட திருமாவளவன்!
இன்று கூட சென்னையில் செய்தியாளர்களிடம் விசிக தலைவர் திருமாவளவன் பேசும்போது, “முதலமைச்சர் ஸ்டாலின் மீது வைக்கப்படும் கடுமையான விமர்சனங்களுக்கு அமைச்சர்கள் சிலர் கூறும் பதில்களும் சில நேரங்களில் விமர்சனத்துக்கு உள்ளாகி விடுகின்றன. இது மிகுந்த வருத்தத்தையும் வேதனையையும் தருவதாக உள்ளது. இது ஏற்புடையது அல்ல” என்று அந்த அமைச்சர்களின் பெயர்களை குறிப்பிடாமல் ஆதங்கப்பட்டு கூறியிருக்கிறார்.
திமுக ஆட்சிக்கு வந்த பின்பு அமைச்சர்கள் பற்றி அவர் இப்படி கருத்து தெரிவிப்பது இதுவே முதல் முறை ஆகும்.
இதற்கு காரணம் திமுக கூட்டணியில் தாங்கள் இருந்தாலும் தங்களுக்கு உள்ள தனிப்பட்ட உரிமைகளை விட்டுக் கொடுத்து விடக்கூடாது என்பதில் விசிக,
மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் கட்சிகள் உறுதியாக இருப்பதுதான்.
அடிமை என சொல்லக்கூடாது
இல்லையென்றால் திமுகவின் அடிமை கட்சிகள் போல் இவை செயல்படுகின்றன என்ற எண்ணம் பொது மக்களிடம் உருவாகிவிடும். அது தங்களுக்கு தேர்தல் நேரத்தில் பாதகமாக அமையும் என்பதால் அதை மனதில் கொண்டும் நாங்கள் ஆளும் கட்சி கூட்டணியில் இருந்தாலும் திமுக அரசு செய்யும் தவறுகளை சுட்டிக்காட்டுகிறோம் என்று கூறுவதற்கு வசதியாக இதுபோல் அவ்வப்போது கண்டன அறிக்கைகளை விடுகிறார்களோ, பேட்டி கொடுக்கிறார்களோ என்றும் கருதத் தோன்றுகிறது.
தவிர 2016-ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில் மூன்றாவது அணியாக கூறப்பட்ட 6 கட்சிகள் கூட்டணியில் மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், விடுதலை சிறுத்தைகள் கட்சி ஆகியவையும் முக்கிய பங்காற்றின என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். அதனால் இந்த கட்சிகள் தற்போது ஒருங்கிணைந்து செயல்படுகின்றன என்று கூடச் சொல்லலாம்” என அந்த அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.
இதுவும் கூட சிந்திக்கக்கூடிய ஒன்றாகத்தான் இருக்கிறது!