குடவாசல் கல்லூரி விவகாரத்தில் அரசியல் வேண்டாம் : மாணவர்களுடன் முன்னாள் அமைச்சர் காமராஜ் போராட்டம்!
Author: Udayachandran RadhaKrishnan30 September 2022, 8:54 pm
குடவாசல் கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றம் செய்வதில் நியாயம் இல்லை. கல்லூரி மாணவர்களுடன் இணைந்து போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் ஆர். காமராஜ் கருத்து .
திருவாரூர் மாவட்டம், நன்னிலம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட குடவாசலில் இயங்கி வரும் டாக்டர் புரட்சித் தலைவர் எம்ஜிஆர் அரசினர் கலைக் கல்லூரியை, திருவாரூர் சட்டமன்றத் தொகுதியை சேர்ந்த செல்லூர் கிராமத்திற்கு மாற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
இதற்கு அக்கல்லூரி மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்து, இந்திய மாணவர் சங்கத்துடன் இணைந்து தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். இந்த நிலையில் இன்று கல்லூரிக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு இருந்தது.
இருப்பினும் கல்லூரிக்கு வருகை தந்து மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மாணவர்களை சந்தித்த தொகுதியின் எம்எல்ஏவும் முன்னாள் அமைச்சர்ருமான ஆர். காமராஜ் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து மாணவர்களுடன் அமர்ந்து கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்திலும் ஈடுபட்டார்.
அப்போது செய்தியாளர்களிடம் முன்னாள் அமைச்சர் ஆர் காமராஜ் எம்எல்ஏ பேசியதாவது, அதிமுக ஆட்சிக்காலத்தில் திருவாரூர் மாவட்டத்தில், குடவாசலில் டாக்டர் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலைக் கல்லூரி உட்பட 3 கல்லூரிகள் ஒரு பாலிடெக்னிக் கல்லூரி கொண்டுவரப்பட்டது.
இதன் மூலம் கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். குறிப்பாக குடவாசல் கல்லூரி என்பது நன்னிலம் திருவாரூர் கும்பகோணம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் இருந்தும் மாணவர்கள் வந்து செல்லக்கூடிய வகையில் வசதியான இடத்தில் செயல்பட்டு வருகிறது.
இதனால் நூற்றுக்கணக்கான கிராமப்புற மாணவர்கள் பயனடைந்து வருகின்றனர். இந்த கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றுவது கண்டனத்துக்குரியது. அதிமுக ஆட்சி காலத்தில் முயற்சி செய்து கொண்டு வரப்பட்ட இந்த கல்லூரியைப் போன்று தாங்களும் புதிதாக கல்லூரிகளை திறந்து மாணவ மாணவிகளுக்கு உயர் கல்வியை படிப்பதற்கான வாய்ப்புகளை உருவாக்க வேண்டும் அதை விடுத்து கல்லூரியை வேறு ஊருக்கு மாற்றம் செய்வது என்பது நியாயமான செயல் அல்ல.
மேலும் கடந்த ஆட்சியின் போது இக்கல்லூரிக்கு சொந்த கட்டிடம் கட்ட அறநிலையத்துறையிடம் அனுமதி பெற்று அதற்கான நிதி ஒதுக்கீட்டையும் அரசிடம் பெற்று தயார் நிலையில் இருந்த போது, கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம் தொடர்பாக உயர் நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில் குடவாசல் கல்லூரி கட்டிடம் தொடர்பான பணிகள் நின்று போய்விட்டன.
தொடர்ச்சியாக ஆட்சி மாற்றம் ஏற்பட்டு விட்டது. தற்போது ஆட்சி மாற்றம் ஏற்பட்ட பின்னரும் இந்த தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் என்ற அடிப்படையில் தொடர்ச்சியாக நான் தமிழக அரசை அணுகி புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என முயற்சி செய்து கொண்டிருக்கிறேன்.
தேவைப்படும் பட்சத்தில் தனியார் இடத்தையும் விலைக்கு வாங்கி கட்டுவதற்கான நடவடிக்கையையும் மேற்கொள்ள தயாராக உள்ளோம். இத்தகைய சூழலில் இந்த கல்லூரி வேறு ஊருக்கு மாற்றம் செய்யப்படுவதை கல்லூரி மாணவர்களே விரும்பாத நிலையில் தான் விடுமுறை நாள் என்பதையும் கருத்தில் கொள்ளாமல் இன்றைய தினம் மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
எனவே மாணவர்களின் உணவு புரிந்து கொண்டு தமிழக அரசு குடவாசல் பகுதியில் கல்லூரி அமைவதற்கு உரிய நடவடிக்கையை எடுக்க வேண்டும். இந்த விவகாரத்தில் அரசியல் பார்வை கொண்டு பார்க்கக் கூடாது என தெரிவித்தார்.