பழமை வாய்ந்த அம்மன் கோவிலின் இடத்தை கையகப்படுத்த முயற்சி : அரசு அதிகாரிகளுக்கு எதிராக பொதுமக்கள் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 October 2022, 3:54 pm

கோவையில் 300ஆண்டுகள் பழமை வாய்ந்த கோவிலுக்கு சொந்தமான இடத்தை வட்டாட்சியர் கையகப்படுத்த முற்பட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

கோவையை அடுத்த மயிலேறியம்பளையத்தில் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த ஸ்ரீ மகாலட்சுமி அம்மன் திருக்கோயில் உள்ளது. இதனை சுற்றி கோவிலுக்கு சொந்தமான பட்டாவுடன் கூடிய இடமும் உள்ளது.

இந்த கோவிலை அந்த ஊரை சேர்ந்த மக்கள் தங்களது காவல் தெய்வமாக வழிபாடு நடத்தி வருகின்றனர். இந்நிலையில் அங்கு திடீரென வந்த வட்டாட்சியர் கோவிலை மட்டும் விட்டுவிட்டு கோவிலுக்கு சொந்தமான இடத்தை கையகப்படுத்த முற்பட்டு நோட்டிஸ் கொடுத்து விட்டு சென்றுள்ளார்.

இதனை அறிந்த அப்பகுதி மக்கள் கோவிலின் முன்பு திரண்டனர். இதனையடுத்து அங்கு வந்த ஊராட்சி தலைவர், கவுன்சிலர், முன்னாள் ஊராட்சி தலைவர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

வரும் காந்திஜெயந்தி அன்று நடைபெற இருக்க கூடிய கிராமசபை கூட்டத்தில் கோவில் நிலம் குறித்து தீர்மானம் நிறைவேற்றி அரசு அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தனர். இதன் பின் பொதுமக்கள் அங்கு இருந்து கலைந்து சென்றனர்.

பழமையான கோவிலுக்கு சொந்தமான இடங்களை பல நூறு ஆண்டுகளாக பொது மக்கள் பயன்படுத்தி வந்த நிலையில் திடீரென கையகப்படுத்த முற்பட்டதால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…