வேட்புமனுவை வாபஸ் வாங்குமாறு நெருக்கடி… பொறுமையிழந்த சசிதரூர் பரபரப்பு புகார்.. காங்கிரஸ் தலைவர் தேர்தலில் பகீர். !!

Author: Babu Lakshmanan
4 October 2022, 9:59 pm

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு அக்டோபர் மாதம் 17-ந் தேதி தேர்தல் நடத்தப்படுகிறது. இந்த தேர்தலில் சோனியா காந்தி குடும்பத்தில் இருந்து யாரும் போட்டியிடவில்லை. காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர், ஜார்கண்ட் மாநில காங்கிரஸ் தலைவர் கேஎன் திரிபாதி ஆகியோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.

முன்னதாக, காங்கிரஸ் தலைவர் தேர்தலில், ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெலாட் போட்டியிடாத நிலையில், மத்திய பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சரும், மாநிலங்களவை எம்.பி.யுமான திக்விஜய்சிங் (வயது 75), தான் போட்டியிடப்போவதாக அறிவித்தார்.

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு ஆதரவாக திக்விஜய சிங் போட்டியிடப் போவதில்லை என அறிவித்தார். இந்த நிலையில், காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்கான இறுதி வேட்பாளர் பட்டியலை கட்சியின் தேர்தல் ஆணைய தலைவர் மதுசூதன் மிஸ்த்ரி வெளியிட்டார். காங்கிரஸ் தலைவர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த மல்லிகார்ஜுன கார்கே மற்றும் சசிதரூர் ஆகியோரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளது.

இதன்மூலம், காங்கிரஸ் கட்சி தலைவர் பதவிக்கு மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, சசி தரூர் இடையே நேரடிப்போட்டி ஏற்பட்டுள்ளது.

இதனிடையே, காங்கிரஸ் தலைவர் தேர்தலுக்காக தனக்கான ஆதரவை சசிதரூர் திரட்டி வருகிறார். அவரது சொந்த மாநிலத்தைச் சேர்ந்த காங்கிரஸ் கமிட்டித் தலைவர் கே.சுதாகரன், மற்றொரு வேட்பாளர் மல்லிகார்ஜுன் கார்கேவுக்கு ஆதரவளிப்பதாக பகிரங்கமாக அறிவித்துள்ளார்.

இந்நிலையில் தமது தேர்தல் பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக திருவனந்தபுரம் வந்த சசிதரூர், செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, அவர் கூறியுள்ளதாவது:- எனது வேட்பு மனுவை வாபஸ் பெற வலியுறுத்துமாறு, ராகுல் காந்தியிடம் சில கட்சித் தலைவர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதை அவரே என்னிடம் தெரிவித்தார்.

கட்சித் தலைவர் பதவிக்கு போட்டி இருக்க வேண்டும் என்று கடந்த 10 ஆண்டுகளாக கூறி வருவதை அவர் (ராகுல் காந்தி) எனக்கு நினைவு கூர்ந்தார். இந்த தேர்தலில் போட்டியிட்டவர்களை வாபஸ் பெறச் சொல்ல மாட்டேன் என்று என்னிடம் அவர் குறிப்பிட்டார். கட்சியின் பெரிய தலைவர்களிடமிருந்து எந்த ஆதரவையும் நான் எதிர்பார்க்கவில்லை. நான் பின்வாங்க போவதில்லை. இதுவரை எனக்கு ஆதரவாக இருந்தவர்களுக்கு துரோகம் செய்ய மாட்டேன்.

யார் கட்சியை பலப்படுத்த வேண்டும் என்பதை அவர்கள் முடிவு செய்து, எதிர்கால சவால்களை எதிர்கொள்ள அவரை தயார்படுத்தலாம், என தெரிவித்தார்.

  • dhanush paid 25 lakhs hospital bill for his director illness நிஜமாகவே கர்ணன்தான்!… தன்னை வைத்து இயக்கிய இயக்குனருக்கு மாபெரும் உதவி செய்த தனுஷ்…