காற்றில் பறக்கும் CM ஸ்டாலினின் உத்தரவு… மதுரையில் அதிகாரம் செய்யும் திமுக மேயரின் கணவர்… அதிகாரிகள் ஷாக்!!
Author: Babu Lakshmanan5 October 2022, 6:36 pm
மதுரை மாநகராட்சி பணிகளை மேயர் மற்றும் மண்டலத்தலைவரின் கணவர்கள் நேரில் ஆய்வு செய்து மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டதால் சர்ச்சை வெடித்துள்ளது.
உள்ளாட்சி தேர்தல்களில் பெண்களுக்கு 50சதவீதம் இட ஒதுக்கீடு என கூறி பெண்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டது. இதனையடுத்து தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக நிர்வாகிகள் அவர்களது மனைவி, தாயார் மற்றும் குடும்ப உறவினர்களுக்கு வாய்ப்புகளை பெற்று வெற்றிபெற வைத்தனர்.
பின்னர் தலைவர்களாக பல்வேறு பதவிகளில் பெண் உறுப்பினர்கள் பதவியேற்ற நிலையில், தொடர்ச்சியாக பெண் மேயர்கள், நகராட்சி, ஊராட்சி, மண்டக்குழு தலைவர்கள் போன்ற பதவிகளில் உள்ள பெண் தலைவர்களை செயல்படவிடாமல், அவர்களது கணவன்மார்களும், குடும்பத்தினரும் அரசு பணிகளில் தலையிட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதனையடுத்து அரசு சார்பில் பெண் தலைவர்களின் செயல்பாடுகளில் கணவரோ, உறவினர்களோ தலையிட்டால் கடும் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.
ஆனால், அரசு உத்தரவையெல்லாம் காற்றில் பறக்க விடும் வகையிலும், சட்டத்திற்கு புறம்பாக மாநகராட்சி பெண் மேயர் முதல் மண்டலத்தலைவர், பெண் மாமன்ற உறுப்பினர்களின் கணவர்மார்களின் தலையீடு அதிகரித்து வருகிறது.
காலியிடத்திற்கு அங்கிகாரம், வீடு கட்ட அனுமதி, அரசு பணிகள் ஒப்பந்தம், வீட்டு வரி, பாதாள சாக்கடை வரி, கடை அனுமதி என அத்தனைக்கும் மேயரை தொடர்புகொள்ளாமல் கணவர் தலையீடு அதிகமாக காணப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இதனை உறுதிப்படுத்தும் விதமாக மதுரை மாநகராட்சி மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட கட்ராபாளையம் பகுதிக்கு மாநகராட்சி பணிகள் குறித்து மாநகராட்சி உதவி ஆணையர் உள்ளிட்ட அதிகாரிகள் நேரில் சென்றனர். அவர்களுடன் மேயரின் கணவரான பொன்.வசந்த் மற்றும் மத்திய மண்டலத்தலைவரான பாண்டிச்செல்வியின் கணவரான மிசாபாண்டியன் ஆகிய இருவரும் ஆய்வு மேற்கொண்டு மாநகராட்சி பணிகளை மேற்கொள்வதற்கான உத்தரவுகளை அதிகாரிகளுக்கு வழங்கினா்.
மதுரை மாநகராட்சியின் பெண் மேயராக இந்திராணி பதவியேற்றதில் இருந்து, அவர் முழுமையாக செயல்படுவதில்லை என பல்வேறு தரப்பினரும் குற்றம்சாட்டிவரும் நிலையில், தொடர்ச்சியாக இது போன்ற ஆய்வு நடத்தப்பட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இது தொடர்பாக கட்ராபாளையம் பகுதி மக்கள் தங்களது சமூகவலைதளங்களில், மேயர் பொறுப்பாளர் பொன்.வசந்த் ஆய்வு மேற்கொண்டதாக பதிவிட்டுள்ளதும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
ஏற்கனவே மேயர் இந்திராணிக்கு ஆலோசகராக சூப்பர் மேயர் என்று சொல்லும் அளவிற்கு பெண் ஒருவரை நியமிக்கப்பட்ட விவகாரம் ஏற்கனவே சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், மீண்டும் மேயரின் கணவர் , மண்டல தலைவரின் கணவர் ஆகியோர் பணிகளை ஆய்வு செய்து அதிகாரிகளுக்கு உத்தரவிட்டது, பெண் தலைவர்கள் உள்ள உள்ளாட்சி அமைப்புகளில் கணவர் மற்றும் உறவினர்கள் தலையீடு இருப்பதை வெளிச்சம்போட்டு காட்டியுள்ளது.
மதுரையில் மக்கள் பிரதிநிதிகளின் கணவன்மார்களின் கை ஓங்கி இருப்பதை முதலமைச்சர் ஸ்டாலின் தடுக்க நடவடிக்கை எடுப்பாரா..? என்ற கேள்வி எழுந்துள்ளது.