‘நான் ஜால்ரா அடிப்பவனல்ல… திமுகவில் நடப்பது வேதனை அளிக்கிறது’ ; திமுக உட்கட்சி பூசலால் அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் புலம்பல்..!!
Author: Babu Lakshmanan13 October 2022, 6:47 pm
மதுரை ; திமுக தலைவர் ஸ்டாலினின் பேச்சையும் மீறி கட்சியினர் சிலர் செயல்படுவது வேதனை அளிப்பதாகவும், தான் யாருக்கும் அடிமையாக இருக்க விரும்பவில்லை என்று நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
மதுரை மடீட்சியா அரங்கில் நிதி அமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தலைமையில் திமுக தலைவராக மு.க.ஸ்டாலின் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதை முன்னிட்டு கட்சியினருக்கு விருந்து அளிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் முழுவதுமாகவே நிதி அமைச்சரின் ஆதரவாளர்கள் மட்டும் வந்திருந்த நிலையில், கட்சி சார்பில் நடக்கக்கூடிய நிகழ்ச்சியை மாவட்டச் செயலாளர் கோ.தளபதி புறக்கணித்தார். மேலும், அமைச்சர்களோ மற்ற திமுக சட்டமன்ற உறுப்பினர்களோ பங்கேற்கவில்லை.
இந்த நிகழ்ச்சியின் மேடையில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் பேசியதாவது :- திமுகவில் சில நாட்களாக வரும் தகவல் வேதனை தருகிறது. சிலர் கட்சி நிகழ்வுகளை தானும் புறக்கணித்து, மற்றவர்களை அழைத்து புறக்கணிக்க கூறி மிரட்டுவதாக தகவல் கிடைத்துள்ளது. தலைவரின் பேச்சை மீறி சிலர் நடந்து கொள்கின்றனர்.
தலைவருக்காக நடத்தப்படக்கூடிய இந்த நிகழ்ச்சியில் அவர்களும் புறக்கணித்து யாரும் வரக்கூடாது என மிரட்டல் விடுத்தது ஆச்சர்யத்தை அளிக்கிறது. அவர் சிறிய மனிதராக நடந்து கொள்ளக்கூடாது. சுயமரியாதைக்காக எதையும் விட்டுக் கொடுக்க மாட்டேன் எனவும் மதுரையில் என்னால் பயனடைந்து செய்நன்றி மறந்தவர்கள் உள்ளனர். அவர்களுக்கு ஒருநாள் வீழ்ச்சி வரும்.
நான் ஜால்ரா அடிப்பவன் இல்லை. நான் ஒரு தகவலை முதல்வரிடம் கூறினால் அதை இதயத்தில் இருந்து கூறுவேன். அடிப்படையாக எனக்கென கொள்கையும் தத்துவம் உண்டு. எனக்கு எது உண்மை என்று தெரிகிறதோ, அதனை நான் பின்பற்றுவன். தந்தை பெரியாரின் கருத்தை நான் பின்பற்றுகிறேன்.
நான் பொருளாதார சுதந்திரத்துடன் இருக்கிறேன். ஆனால், சிலர் பொருளாதாரத்தை விட பேராசைபடுகின்றனர். நான் யாருக்கும் அடிமையாக இருக்க தேவையில்லை, என்ன நடக்குமோ அது விரைவில் நடக்கும். நான் பெரிய மனிதன். எனக்காக ஜால்ரா தட்டு என யாரையும் சொல்லமாட்டேன். பெரிய மனிதனாக இருக்க முடியவில்லையென்றாலும் குட்டி மனிதர்களாக இருக்காதீர்கள்.
என்றும் யாரிடமும் அவரை போய் பார்க்காதே, போஸ்டரில் என் பெயரை போடு என சொல்லமாட்டேன். நான் பெரிய மனிதன். எனக்காக போஸ்டர் ஒட்டு, வேலை செய் என சொல்ல மாட்டேன். நான் பெரிய மனிதன். என்னால் பலனடைந்தவர்கள் பலர், செய் நன்றி மறந்தவர்கள் மதுரையில் இருக்கிறார்கள். நான் எப்போதும் செய் நன்றி மறக்க மாட்டேன்.
நான் யாருடனும் போட்டியிட விரும்பவில்லை. நான் தனி பாதையில் சென்று கொண்டு இருக்கிறேன். 5 முறை அரசியல் அழைப்பு வந்தது. நான் தவிர்த்தேன். 6வது முறையாக வந்த அழைப்பை ஏற்றேன். என் தலைவர் எனக்கு பெரிய பொறுப்பு கொடுத்துள்ளார். நான் அதிலிருந்து கீழ் இடத்திற்கு இறங்க விரும்பவில்லை.இயற்கையில் என்ன நடக்குமோ, அது நடக்கும். தகுதியுள்ள, பெருந்தன்மை உள்ள ஆட்களை வீழ்த்த முடியாது.
சிலர் திமுக கட்சி பொறுப்பை தருவதாக கூறி எனது ஆதரவாளர்களை போனில் அழைத்துள்ளனர். ஆனால், என் ஆதரவாளர்கள் மறுத்துவிட்டனர். இதேவழியில் இப்படியே செல்வோம், எனக் கூறினார்.
கூட்டத்தில் பங்கேற்ற இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட திமுக தொண்டர்கள், கூட்டத்திற்கு பின்னர் விருந்து சாப்பிடுவதற்காக முண்டியடித்துக் கொண்டு சென்ற பொழுது கண்ணாடி கதவு உடைந்ததில் பெண் ஒருவர் காயமடைந்தார். அவரை மீட்ட திமுகவினர் அருகில் உள்ள மருத்துவமனை அழைத்துச் சென்றனர்.