வாடகை வீட்டை சொந்தமாக்க காங்கிரஸ் பிரமுகர் முயற்சி ; பசுவை கொன்று வீட்டில் புதைத்து மாந்திரீக பூஜை… உரிமையாளர் போலீசில் புகார்..!!
Author: Babu Lakshmanan14 October 2022, 11:29 am
திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் தலைவர் மீது பசுவை கொன்று புதைத்ததாகவும் வாடகைக்கு எடுத்த வீட்டை ஆக்கிரமிப்பு செய்ததாகவும் திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் நேர்ஜி நகரை சேர்ந்தவர் ராஜா முகமது. இவருக்கு திண்டுக்கல் பேருந்து நிலையம் பென்சனர் காம்பவுண்டு அருகே வீடு அமைந்துள்ளது. இந்த வீட்டை திண்டுக்கல் மாநகர மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டனுக்கு கடந்த 2018ஆம் ஆண்டு வாடகைக்கு விடப்பட்டுள்ளது.
இந்த நிலையில், சில மாதங்களாக வாடகையும் செலுத்தவில்லை. வீட்டையும் காலி செய்யவில்லை. மேலும், இந்த வீட்டை அபகரிக்கும் நோக்குடன் பசு ஒன்றை கொலை செய்து வீட்டின் உள்பகுதியில் புதைத்து மாந்திரீகம் செய்ததாக மாநகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் மீது குற்றம்சாட்டப்பட்டது.
வீட்டின் உரிமையாளருக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும், அடியாட்களை வைத்து மிரட்டி வருவதாகவும், மேலும் பசுமாட்டை பலி கொடுத்து புதைத்து விடுவதோடு கொலை மிரட்டல் விடுத்த துரை மணிகண்டன் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறி திண்டுக்கல் நகர் காவல் நிலையத்தில் புகார் மனு அளித்தார்.
இந்தப் புகாரின் அடிப்படையில் நேரடியாக ஆய்வு செய்த திண்டுக்கல் நகர் வடக்கு காவல்துறை ஆய்வாளர், பசு புதைத்தது உண்மை என்பதை உறுதி செய்து, காங்கிரஸ் கமிட்டி தலைவர் துரை மணிகண்டன் மீது நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளார். மேலும், புதைக்கப்பட்ட பசுவை இன்று கால்நடை மருத்துவர்கள் உதவியுடன் பிரேத பரிசோதனை செய்யப்படுவதாகவும் கூறப்படுகிறது.