Bigg Boss 6 Tamil Episode 4: ‘நடிக்காதீங்க முத்து.. – எனக்கு நடிக்கத் தெரியாதும்மா’.. இன்றைய பிக்பாஸ் ஹைலைட்ஸ்..!

Author: Vignesh
14 October 2022, 11:00 am
  • ஆயிஷாவும் தனலஷ்மியும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் மாதிரி உலவுகிறார்கள். அதே வயது என்பதால் ஜனனியும் இந்த செட்டில் சோ்ந்திருக்கிறார். நட்பு வேறு, நியாயம் வேறு என்கிற முதிர்ச்சி இவர்களிடம் இல்லை.
  • “என் தலைவனையே கலங்க வெச்சிட்டாங்களே… பச்சப்புள்ளைய்யா அது” என்று ஜி.பி.முத்துவின் ரசிகர்கள் ஆத்திரப்படும்படியான சம்பவம் இன்று நடைபெற்றது. இதுதவிர சில கூட்டணிகள் உடைந்தன. புதிய கூட்டணிகள் ஆரம்பித்தன.
  • வார இறுதியில் பஞ்சாயத்து செய்ய ஆண்டவருக்கு நிறைய விஷயம். இருக்கிறது. அவர் பாயிண்ட் டு பாயிண்ட் பேசினால் வீக்கெண்ட் நிச்சயம் ரகளையாக மாறும். அல்லாமல் “இப்படித்தான்… அவ்வை சண்முகி ஷூட்டிங்ல என்ன ஆச்சுன்னா..” என்று ஆரம்பிக்கக்கூடாது

நாள் 4-ல் நடந்தது என்ன?

bigg boss day4_updatenews360

முந்தைய சீசன்களில் எல்லாம் ‘சமைத்தோமா. பெருக்கினாமா..’ என்று விஷயம் முடிந்து விடும். ஆனால் இந்த சீசனில் கார்ப்பரேட் கம்பெனி மாதிரி தினம் தினம் ‘ரிவ்யூ மீட்டிங்’ வைக்கிறார் பிக் பாஸ். எனவே அவரது நோக்கம் கச்சிதமாக நிறைவேறுகிறது. ஆரம்பக்கட்ட தயக்கங்களை உடைத்தெறிந்து விட்டு மக்கள் கொலைவெறியுடன் ஒருவர் மீது ஒருவர் பாய்ந்து புகார்களை அடுக்குகிறார்கள். மகேஸ்வரி இதில் மாஸ்டர் பட்டமே வாங்கி விடுவார் போல. வாரண்டி காலம் முடிந்து போன ஸ்பீக்கர் போல ‘கீச். கீச்’.. சென்று எபிஸோட் முழுக்க இவரது சத்தம்தான் கேட்கிறது.

bigg boss day4_updatenews360

ஆறிப் போன சாம்பாரை மறுபடியும் சூடு செய்த தனலஷ்மி

ரெவ்யூ டைம். முந்தைய நாளில் பாராட்டு பெற்ற பாத்ரூம் க்ளீனிங் கிளப், இந்த முறை சில புகார்களை எதிர்கொள்ள வேண்டியிருந்தது. பாத்திரம் சுத்தம் செய்யும் கிளப் மீது சில புகார்களை மகேஸ்வரி சொல்ல, அதற்கு உக்கிரமாக பதில் சொல்ல ஆரம்பித்தார் மணிகண்டன்.

ஆறிப்போன சாம்பார் விவகாரத்தை மறுபடியும் சூடு செய்ய ஆரம்பித்தார்கள். “மதியம் வைக்கற சாம்பாரை நைட்டு வெக்கக் கூடாதான்னு கேட்டேன். இதுவொரு குத்தமாய்யா?” என்கிற பிராதை பஞ்சாயத்தில் தந்தார் தனலஷ்மி. ‘தப்பு.. தப்பு.. அதெல்லாம் நீ கேட்கக்கூடாது. அது எங்க இஷ்டம்’ என்று தெனாவெட்டாக மகேஸ்வரி பதில் சொல்லியது பலரையும் காண்டாக்கியது. “சாம்பார் கெட்டுப் போயிருந்தா குறை சொல்லுங்களேன்” என்று சாந்தி தந்த விளக்கம் கன்வின்ஸ்ங்காக இருந்தது.

bigg boss day4_updatenews360

தினம் தினம் சமைப்பதும் அதைப் பற்றி யோசிப்பதும் மனஉளைச்சல் தரும் விஷயம். பல பெண்கள் தினசரி எதிர்கொள்கிற டார்ச்சர் இது. எனவே அவர்களின் சௌகரியத்திற்கு சில ஏற்பாடுகள் செய்து கொள்வதை இதர குடும்ப உறுப்பினர்கள் புரிந்து கொள்ள வேண்டும். இரவுப் பணியை குறைப்பதற்காக மதியமே அதற்கும் சோ்த்து சமைப்பது பெரிய குற்றம் கிடையாது. அது கெட்டுப் போனால்தான் பிரச்சினை.

bigg boss day4_updatenews360

மாமியார், நாத்தனார் போல் ஒட்டி உறவாடிய சாந்திக்கும் மகேஸ்வரிக்கும் மெல்ல விரிசல் ஆரம்பித்திருக்கிறது. “மத்தவங்களையும் பேச விடு” என்று மகேஸ்வரியிடம் சாந்தி சொல்வது சரியான விஷயம். மற்றவர்களுக்கு சான்ஸே தராமல் முந்திரிக்கொட்டை போல தானே அனைத்தையும் பேசித் தீர்க்க வேண்டுமென்று நினைக்கிறார் மகேஸ்வரி. க்ளீனிங் டீம் பற்றிய ரிவ்யூவின் போது அஸிமிற்கும் மகேஸ்வரிக்கும் இடையே முட்டிக் கொள்ள அஸிம் எரிச்சலுடன் வெளிநடப்பு செய்தார்.

bigg boss day4_updatenews360

அடுத்ததாக ஸ்வாப்பிங் டைம். சாந்தி மீது புகார் சொன்னார் விக்ரமன். அதை ஏற்றுக் கொண்ட கிச்சன் கிளப் ஓனர் ஷவின், விக்ரமனை விடுவித்து சாந்தியை வாழைப்பழ பெட்டில் போட்டார். ‘எங்க தலைக்கு தில்ல பார்த்தியா. மெயின் சுவிட்ச் மேலயே கை வைக்குது’ என்கிற மாதிரி ஜி.பி.முத்து மீது புகார் சொன்னார் ஆயிஷா. இதை ஜனனியும் ஏற்றுக் கொண்டார். இதனால் ஜி.பி.முத்துவும் தனலஷ்மியும் தனித்தனியாக கண்கலங்கும் சூழல் ஏற்பட்டது.

bigg boss day4_updatenews360

இந்த விவகாரத்தை சற்று விரிவாக பார்த்து விடுவோம். “ஜி.பி.முத்து மற்ற அணிகளுக்கும் வேலை செய்து தருகிறார். இதனால் அணி கட்டுப்பாடு இல்லை. எடுத்துச் சொன்னாலும் முத்து ஏற்க மறுக்கிறார். அவருக்கு பல விஷயங்கள் புரியவில்லை” என்பது ஆயிஷாவின் புகார். “என் கடமையையெல்லாம் கரெக்ட்டா செஞ்சுட்டுதானே மத்தவங்களுக்கு ஹெல்ப் பண்றேன். இதுல என்ன தப்பு? என்னால அப்படித்தான் இருக்க முடியும். என்ன வேணா பண்ணிக்கங்க. ஐ டோன்ட் கோ்” என்று கெத்தாக பதிலடி தந்து விட்டார் முத்து.

bigg boss day4_updatenews360

தன்னுடைய வேலையையும் முடித்து விட்டு மற்றவர்களுக்கும் உதவுவது உண்மையில் பாராட்டத்தக்க விஷயம். ஆனால் ஆயிஷா இதை ஒரு புகாராகக் கொண்டு செல்வதே அபத்தம் என்றால், கிளப் ஓனர் ஜனனியாவது இந்தப் புகாரை ரிஜக்ட் செய்திருக்க வேண்டும்.

ஆயிஷாவும் தனலஷ்மியும் ஒட்டிப் பிறந்த குழந்தைகள் மாதிரி உலவுகிறார்கள். அதே வயது என்பதால் ஜனனியும் இந்த செட்டில் சோ்ந்திருக்கிறார். நட்பு வேறு, நியாயம் வேறு என்கிற முதிர்ச்சி இவர்களிடம் இல்லை. என்ன காரணத்தினாலோ ஆயிஷாவிற்கும் தனலஷ்மிக்கும் ஜி.பி.முத்துவைப் பிடிக்கவில்லை.

bigg boss day4_updatenews360

இதர அணிகளில் தண்டனை மாறவில்லை. எனவே ஸ்வாப்பிங் டைமின் இறுதி முடிவு இதுதான். அஸிம், முத்து, சாந்தி, ராம் ஆகிய நால்வரும் வாழைப்பழத்தில் தூங்குவார்கள். ஒருவேளை முத்து எலிமினேஷன் ஆபத்தை சந்திக்க நேர்ந்தால் அவரது செல்வாக்கு இன்னமும் கூடும். கள்ள ஓட்டு குத்தியாவது ரசிகர்கள் அவரை பெருவாரியாக ஜெயிக்க வைத்து விடுவார்கள். ‘என் தலைவனை குறை சொல்லிட்டாங்களே’ என்று கடுமையான ஆதங்கத்தில் இருக்கிறார்கள்.

‘நடிக்காதீங்க. முத்து.. – எனக்கு நடிக்கத் தெரியாதும்மா’..

bigg boss day4_updatenews360

ஸ்வாப்பிங் பஞ்சாயத்து முடிந்தாலும் அதன் சூடு குறையவில்லை. “ஸாரி கேட்டாலும் முறைக்கறாங்க” என்று ஆயிஷாவின் உடல்மொழியை வருத்தத்துடன் முத்து சொல்ல “இதெல்லாம் மட்டும் புரியுதா.. நல்லா நடிக்கறீங்க.. ” என்று தனலஷ்மி முத்து மீது பாய “என்னது நடிக்கறனா.. நான் நடிக்கறனா. மக்களே.. இது நியாயமா.. நண்பர்களே.. இது தர்மமா’ என்று காமிரா முன்பு நீதி கேட்க ஆரம்பித்து விட்டார் முத்து. ‘நடிக்கிறியா?’ என்கிற கேள்வி கடந்த சீசன் தாமரையையும் அதிகம் புண்படுத்தியது என்பதையும் இங்கு நினைவில் கொள்ள வேண்டும்.

bigg boss day4_updatenews360

அசல் ஆரம்பித்து வைத்தாலும் வைத்தார்.. ‘நீ வா போ’ என்று பேசுவது இந்த சீசனில் மகா குற்றமாக ஆகி விடும் போல. “நீ வா போன்னு பேசாதீங்க” என்று தனலஷ்மி அடுத்த குண்டை தூக்கிப் போட “நீ என் பொண்ணு மாதிரிம்மா.. மன்னிச்சுடும்மா” என்றெல்லாம் கலங்கிய முத்துவை மற்றவர்கள் சமாதானப்படுத்தினார்கள்.

நாள் 4 விடிந்தது. (என்னது!.. கட்டுரையே முடியப் போவுது.. இப்பத்தான் விடியுதா?!). ‘சோ.. காமா..’ என்கிற ரகளையான பாடலை ஒலிக்க விட்டார் பிக் பாஸ். ஷிவின் பெட்ரூமில் தனியாக ஆடிக் கொண்டிருந்தார்.

“இத்தனை வருஷத்துல இந்த வீட்டுக்காக நான் என்னவெல்லாம் உழைச்சிருப்பேன். என் மேல பிராது கொடுத்திட்டாங்களே’ என்கிற அனத்தலோடு வீட்டின் திண்ணையில் சாய்ந்திருந்த சாந்தி, ‘இருந்தாலும் நான் வேலை செய்வேன்’ என்று மறுபடியும் கிச்சனுக்குள் வந்து விட்டார். வேலையும் செய்து விட்டு பிறகு அனத்துவது ஒருவகையான மாமியார் டெக்னிக்.

bigg boss day4_updatenews360

ஒரு பக்கம் ரத்தபூமி போல பிக் பாஸ் கொதித்துக் கொண்டிருந்தாலும் இன்னொரு பக்கம் இதிலிருந்து நமக்கு பெரிதும் ஆறுதல் அளிப்பது இளைஞர் அணி செய்யும் குறும்புகள்தான். அமுதவாணன் தலைமையிலான ‘பாத்ரூம் அணி’, ரெட்கார்ப்பெட் வெல்கம் என்கிற பெயரில் வருகிறவர்களையெல்லாம் ஜாலி இம்சை செய்து கொண்டிருந்தார்கள். ‘டிக்கிலோனா’ மாதிரி பின்பக்கமாக குதித்துக் கொண்டுதான் பாத்ரூமிற்குள் செல்ல வேண்டும் என்று ஆரம்பித்து இவர்கள் செய்த கலாட்டாக்கள் சிரிக்க வைத்தன. ஆனால் பாத்ரூம் அவசரத்தில் வருபவர்களை இப்படி சாவகாசமாக நிற்க வைத்து காமெடி டார்ச்சர் தருவது ஒருவகையான அநீதி.

bigg boss day4_updatenews360

கதிரவன் தாளம் போட, அஸிமும் ராபர்ட்டும் இணைந்து பாட ‘ஒரே காதல் ஊரில் இல்லையடா’ என்று இசைக்கச்சேரி நடந்து கொண்டிருந்தது. (கமல் கிட்ட நல்ல பாராட்டு வாங்கறதுக்கா?!). இன்னொரு பக்கம், சொந்தமாக உருவாக்கிய வரிகளையும் தாளத்தையும் இட்டு ரகளையாக கானா பாடிக் கொண்டிருந்தார் ஏடிகே. முன்னதை விடவும் இது சிறப்பான கச்சேரி.

பிக் பாஸில் இன்னொரு ‘லவ் டார்ச்சரா?’

மற்ற நேரங்களில் சண்டைக்கோழியாக திரியும் மகேஸ்வரி, ராமிடம் பேசும் போது மட்டும் பிராய்லர் கோழியாக பம்மி விடுவதின் மர்மம் என்னவென்று தெரியவில்லை. “இப்படித்தான் எல்லாப் பொண்ணுங்க கிட்டயும் ஸ்வீட்டா பேசுவீங்களா.. இல்ல என் கிட்ட மட்டும்தானா?” என்று மகேஸ்வரி ராமிடம் கிசுகிசு குரலில் கேட்க ‘இது ஏதடா வம்பு?’ என்று மைண்ட் வாய்ஸ் ஓடியதோ, என்னமோ.. “யம்மா தாயி.. நான் எல்லோர் கிட்டயும் அப்படித்தான் ஸ்வீட்டாதான் பேசுவேன். ஏன்னா நான் சுகர் பேஷண்ட்டு” என்பது போல் பதில் சொல்லி எஸ்கேப் ஆனார் ராம். (கடவுளே!.. அபிநய் – பாவ்னி எபிஸோட் மாதிரி இதுவும் ஆகி விடக்கூடாது).

bigg boss day4_updatenews360

‘இவிய்ங்களை கொஞ்ச நேரம் ஃப்ரீயா இருக்க விட்டது தப்பா போச்சே’ என்று நினைத்த பிக் பாஸ், ‘தண்ணில கண்டம்’ என்றொரு புதிய டாஸ்க்கை ஆரம்பித்தார். ஆனால் அது வருண பகவானுக்கு பிடிக்கவில்லை. “நீ என்ன சொல்றது. தண்ணில கண்டம்னு.. நான்தான் சொல்லுவேன்’ என்று அவர் நினைத்து விட, பயங்கர மழை பெய்ததால் டாஸ்க் நிறுத்தி வைக்கப்பட்டது. பிறகு ஆரம்பித்தது.

ஒரு கண்ணாடி டாங்க்கிற்குள் தலை மட்டும் நுழையும்படியான செட்டப். போட்டியில் கலந்து கொள்பவர் அதில் தலையை நுழைத்துக் கொள்ள டாங்க்கில் நீர் ஊற்றுவார்கள். யார் கடைசி வரைக்கும் தாக்குப் பிடிக்கிறார்கள் என்பதுதான் போட்டி. தனலஷ்மியும் நிவாவும் பாதியிலேயே முடியாமல் ஓட, அசலும் ஏடிகேவும் தாக்குப் பிடித்தார்கள். இறுதியில் ஏடிகே வெற்றி. அவருக்கு ஒரு ஸ்டார் பரிசு.

bigg boss day4_updatenews360

போட்டி முடிவு தொடர்பாக அஸிமிற்கும் மகேஸ்வரிக்கும் இடையில் மறுபடியும் முட்டிக் கொண்டது. “நீ வெளில போனப்பறம் பாரு. உன்னைப் பார்த்து வாந்தி மட்டும்தான் எடுக்காம இருந்திருப்பாங்க.. அத்தனை கமெண்ட்ஸ் வந்திருக்கும்’ என்பது போல் அஸிம் சூடாக “நீ பேசு. மகனே.. இன்னமும் என்ன தோணுதோ அதையெல்லாம் பேசு பார்க்கலாம்” என்று மகேஸ்வரி எகிறி வருவது போல் வந்து பிறகு ஆஃப் ஆனார்.

‘யார் சிறந்த கிளப்?’ என்று முடிவு செய்யும் நேரம். கிச்சன் கிளப்பிற்கு ஏகோபித்த பாராட்டு கிடைத்தது. ‘சாந்தியக்கா வெச்ச காரச்சட்னி செம’ என்று பாராட்டிய அமுதவாணன், ‘மகேஸ்வரி அழாம சமைச்சிருந்தா உப்பு கொஞ்சம் கூடாம இருந்திருக்கும்’ என்று கிண்டலடித்தார். இறுதியில் இவர்களுக்கு ஐந்து ஸ்டார்கள் கிடைத்ததில், கிச்சன் டீம் சந்தோஷத்தில் குளிர்ந்து போனார்கள்.

bigg boss day4_updatenews360

‘அடடே.. எபிஸோடை ஜாலி மூடோட முடிக்கப் போறாங்க போலயே’ என்று நாம் நினைத்துக் கொண்டிருந்த போதே ‘அப்படில்லாம் விட்ருவமா..’ என்று அசரிரீ வடிவில் வந்து பிக் பாஸ் டீம் பதில் சொன்னது. ‘இந்த ஆரம்பம் நன்றாகவே சென்றாலும் அடுத்தடுத்து வந்து உரையாடல்களில் சலசலப்பு ஏற்பட்டது’ என்பதை வாய்ஸ் ஓவரில் சொல்லி “நாளைக்கும் சண்டை இருக்கு. மறக்காம வந்துருங்க சாமியோவ்’ என்று விளம்பரம் போட்டு விட்டார்கள்.

  • Personal life vs career gv prakash talk சினிமா FIRST…மனைவி NEXT..மனம் திறந்த ஜி வி பிரகாஷ்..!
  • Views: - 556

    0

    0