விவசாய தோட்டத்தின் மின் இணைப்பை துண்டித்த திமுக கவுன்சிலர்… பாதையை பத்திரம் போடும் முயற்சி தோல்வி… பழிவாங்கப்படும் விவசாயி!!
Author: Babu Lakshmanan14 October 2022, 4:39 pm
கிருஷ்ணகிரி : பாதையை பத்திரமாக எழுதித் தர மறுத்த விவசாயியின் தோட்டத்தின் மின் இணைப்பை திமுக கவுன்சிலர் துண்டித்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்ட பந்தரவள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் மணி. விவசாயியான இவர், தனக்கு சொந்தமான மாந்தோப்புக்கு மின் இணைப்பு கோரி விண்ணப்பித்துள்ளார். அப்போது, பக்கத்து தோட்டக்காரரான கண்ணன் என்பவருக்கு, அவரது தோட்டத்திற்கு செல்ல 10 அடி பாதை வழங்குமாறு ஜிங்கல் கதிரம்பட்டி திமுக கவுன்சிலர் ஐயப்பன் நிபந்தனை விடுத்துள்ளார்.
இதனை ஏற்று விவசாயி மணியும், 10 அடி பாதையாக தனது நிலத்தை பயன்படுத்திக் கொள்ள வாய்மொழியாக அனுமதி வழங்கியுள்ளார். இதையடுத்து, அவருக்கு உடனடியாக மின் இணைப்பு கொடுக்கப்பட்டது.
விவசாயிகளுக்கு நடுவே மத்தியஸ்தம் செய்த திமுக கவுன்சிலர் ஐயப்பன், 10 அடி நிலத்தை தானமாக கொடுத்தது போன்று பத்திரத்தை தயார் செய்து வந்து, மணியிடம் கையெழுத்து போடும்படி கேட்டுள்ளார். ஆனால், சுதாரித்துக் கொண்ட மணி, அதில் கையெழுத்து போட மறுப்பு தெரிவித்துள்ளார்.
இதனால், ஆத்திரமடைந்த திமுக கவுன்சிலர் ஐயப்பன், மணியின் தோப்புக்கு மின் இணைப்பு கொடுக்கப்பட்ட உயர்மின் அழுத்த கம்பத்தில் ஏணி வைத்து ஏறி, மின் இணைப்புக்கான கம்பிகளை துண்டித்துள்ளார். இதையடுத்து, பாதிக்கப்பட்ட விவசாயி மணி, போலீஸார் மற்றும் மின்சார வாரியத்தில், புகைப்படத்துடன் புகார் அளித்துள்ளார்.