அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாத CM ஸ்டாலின்… சபாநாயகரை வைத்து நாடகமாடும் திமுக ; செய்தியாளர்கள் சந்திப்பில் இபிஎஸ் ஆவேசம்.!!

Author: Babu Lakshmanan
19 October 2022, 11:03 am

சென்னை ; அதிமுகவை எதிர்க்க திராணி இல்லாத திமுக தலைவர் ஸ்டாலின், திட்டமிட்டு சபாநாயகர் அப்பாவுவை பயன்படுத்தி எங்களை வெளியேற்றுவதாக எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டியுள்ளார்.

நேற்று சட்டப்பேரவையில் எடப்பாடி பழனிசாமி தரப்பினரின் கோரிக்கையை நிராகரித்து, அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் சட்டசபையை புறக்கணித்தனர்.

இதைத் தொடர்ந்து, ஜனநாயகப் படுகொலை செய்யப்பட்டதாகக் கூறி சென்னை வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி அளிக்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, திமுக அரசுக்கு எதிராக அதிமுகவினர் முழக்கமிட்டனர்.

இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை போலீசார் கைது செய்தனர். பின்னர், கைது செய்யப்பட்ட அதிமுக எம்எல்ஏ.,க்கள் அரசு பேருந்தில் ஏற்றப்பட்டு, எழும்பூரில் உள்ள ராஜரத்தினம் மைதானத்திற்கு கொண்டு செல்லப்பட்டனர்.

அங்கு எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்களிடம் பேட்டி கொடுத்தார். அப்போது, அங்கிருந்த போலீசார் அவரை பேட்டி கொடுக்கக்கூடாது என தடுத்தனர். இதனால் ஆவேசமடைந்த பழனிசாமி, பேட்டியை பாதியில் நிறுத்தி, எழுந்து நின்று போலீசாரிடம் கடிந்து பேசினார்.

பின்னர் மீண்டும் பேட்டியை தொடர்ந்தார். அப்போது, அவர் பேசியதாவது :- நேற்று நீதிமன்ற தீர்ப்பு மற்றும் அனைத்து ஆதாரங்களோடு விளக்கமளித்தும் சபாநாயகர் ஏற்றுக்கொள்ளவில்லை. எதிர்க்கட்சி துணைத் தலைவராக ஆர்.பி.உதயகுமாரை தேர்ந்தெடுத்துள்ளோம். அவருக்கு இருக்கை ஒதுக்க வேண்டும் என கடிதம் கொடுத்தோம். ஆனால் 3 மாதமாக அந்த கடிதத்தை கடப்பில் போட்டுள்ளனர்.

சபாநாயகர் நடுநிலையாக செயல்பட மறுக்கிறார். எம்எல்ஏ.,க்கள் ஆதரவு அடிப்படையில் இருக்கை ஒதுக்க வேண்டும். சட்டசபையில் அதிமுக.,வினருக்கு அநீதி இழைக்கப்படுகிறது. நேற்று சட்டசபை முடிந்த பிறகு ஸ்டாலினும், ஓபிஎஸ்.,சும் அரைமணி நேரம் பேசிக் கொண்டிருந்தனர். அதிமுக.,வை சிதைக்க வேண்டும், உடைக்க வேண்டும் என்ற முதல்வர் ஸ்டாலினின் எண்ணம் பலிக்காது.

எம்எல்ஏக்கள் ஆதரவு தான் முக்கியம்; கட்சியை அடிப்படையாக சொல்கின்றார்கள்; எம்எல்ஏ.,க்கள் அடிப்படையில் தான் இருக்கை ஒதுக்க வேண்டும். சட்டசபை விதிகளில் இடம் இல்லை என்கிறார் சபாநாயகர். இது தவறான வாதம், சட்டத்தில் இடம் உள்ளது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு சீர்குலைத்துள்ளது. ஓபிஎஸ், மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோரை கட்சியை விட்டே நீக்கிவிட்டதாக கூறியும், ஓபிஎஸ்.,க்கு ஆதரவாக சபாநாயகர் செயல்படுகிறார், எனக் கூறினார்.

  • Allu Arjun Pushpa2 box office collection புத்தாண்டில் புது மைல்கல்…அதிர வைக்கும் அல்லு அர்ஜுன் புஷ்பா2 வசூல்..!
  • Views: - 531

    0

    0