தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி… முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சோளக்காட்டு பொம்மை ; அதிமுக எம்பி சிவி சண்முகம் கடும் விமர்சனம்..!!
Author: Babu Lakshmanan21 October 2022, 11:33 am
கடலூர் ; தமிழகத்தில் நடந்து கொண்டிருப்பது குடும்ப ஆட்சி என்றும், திமுக முதலமைச்சர் ஸ்டாலின் ஒரு சோளக்காட்டு பொம்மை முதல்வராக செயல்படுகிறார் என அதிமுக மாநிலங்களவை உறுப்பினர் சி.வி சண்முகம் விமர்சனம் செய்துள்ளார்.
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 51வது பொன்விழா தொடக்க விழாவை முன்னிட்டு, கடலூர் மேற்கு மாவட்டத்தின் சார்பாக, விருத்தாச்சலம் வானொலி திடலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது. சுமார் 3,000க்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்கள் கலந்து கொண்ட கூட்டத்திற்கு, கடலூர் மேற்கு மாவட்ட செயலாளரும், புவனகிரி அதிமுக சட்டமன்ற உறுப்பினருமான அருண்மொழித் தேவன் தலைமையில் நடைபெற்றது.
இக்கூட்டத்திற்கு சிறப்பு அழைப்பாளராக கழக அமைப்பு செயலாளரும், முன்னாள் அமைச்சரும், மாநிலங்களவை உறுப்பினருமான சி.வி சண்முகம் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.
மாநிலங்களவை உறுப்பினர் சிவி சண்முகம் பேசியதாவது :- அதிமுக இயக்கம் தொடங்கப்பட்டதற்கு முக்கிய காரணம், கருணாநிதி என்ற தீய சக்தியை அழிப்பதற்காக. தொண்டர்களால் உருவாக்கப்பட்ட இயக்கம், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம். அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் 50 ஆண்டுகால வரலாற்றில், 32 ஆண்டுகள் ஆட்சி கட்டிலில் அமர்ந்துள்ள மாபெரும் இயக்கமாக உள்ளது.
திமுக தலைவர் ஸ்டாலின் அதிமுக இயக்கத்தை பிளவுபடுத்தி விடலாம் என கனவு காண்கிறார். அதிமுக இயக்கத்தால் உருவாக்கப்பட்ட கருங்காலி ஓபிஎஸ் உடன் திமுக இணைந்து, அழித்துவிடலாம் என நினைக்க வேண்டாம்.
கடந்த அதிமுக ஆட்சியில் வைகோ தலைமையில் நடைபெற்ற பேரணியில், சட்ட ஒழுங்கை காப்பாற்ற வேண்டும் என்ற எண்ணத்தில், புரட்சித்தலைவி செயல்பட்டார். தற்போது ஆட்சிக் கட்டிலில் உள்ள சின்ன புத்தி ஸ்டாலினைப்போல், புரட்சித்தலைவி அம்மா நினைத்து இருந்தால், திமுக என்றைக்கோ அழிந்திருக்கும். திமுகவிற்கு பிச்சை போட்டது புரட்சித்தலைவி அம்மா.
முதலமைச்சராக ஆட்சிக் கட்டிலில் அமர வைத்த அதிமுகவின் கோவிலாக இருக்கக்கூடிய தலைமைக் கழகத்தை, திமுகவுடன் இணைந்து காவல்துறை துணையுடன் உள்ளே புகுந்து, சூறையாடி சென்ற ஓபிஎஸ் ஒரு கருங்காலி துரோகி. திமுகவிடம் இணைந்து அதிமுகவை முடக்கி விடலாம் என நினைப்பது முடியவே முடியாது.
திமுக ஆட்சி முடிவதற்கு, ஐந்து வருடம் காத்திருக்க தேவையில்லை. திமுக ஆட்சி எப்போது போகும் என திமுகவினரே புலம்புகின்றனர். திமுக ஆட்சி வெளங்காது, உருப்படாது, ஒரே குடும்பம் கொள்ளையடிக்க பார்க்கிறது என திமுகவினர் சொல்கின்றனர். அடுத்த ஆட்சி அதிமுக ஆட்சி என்று கூறுகின்றனர்.
திமுக தலைவர் ஸ்டாலின் காலையில் எழுந்திருப்பதும், பவுடர் அடிப்பதும், டோப்பாவுக்கு மை அடிப்பதிலும் பிசியாக உள்ளார். நாட்டில் என்ன நடக்கிறது என்று தெரியாமல், நிர்வாக திறனற்ற தத்தி முதலமைச்சரை யாரும் பார்த்ததில்லை. திமுக முதலமைச்சர் ஸ்டாலினுக்கு சொல் புத்தியும் இல்லை, சுய புத்தியும் இல்லை. அவர் ஒரு சோளக்காட்டு பொம்மை முதல்வர். எழுதிக் கொடுத்தாலும் சரியாக படிக்கத் தெரியாத திமுக முதலமைச்சர் ஒரு இயந்திரம்.
தமிழகத்தை ஆண்டு கொண்டிருப்பவது அவரது குடும்பம். ஸ்டாலின் மனைவி துர்கா, அவரது மகன் உதயநிதி, மருமகன் சபரீசன் ஆகியோர்தான் ஆட்சி நடத்துகின்றனர். தமிழகத்தில் நடப்பது குடும்ப ஆட்சி.
மக்களின் பிரச்சினைகளை கண்டறிந்து, அப்பிரச்சனைகளை திமுக முதலமைச்சர் ஸ்டாலின் தீர்க்கவில்லை. தேர்தலின் போது கொடுத்த 525 வாக்குறுதிகள் எதுவும் செய்யவில்லை. கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற தேவையே இல்லை . கடந்த 10 ஆண்டுகளாக அதிமுக ஆட்சி செய்த திட்டங்கள் கொண்டுவரப்பட்ட திட்டங்களை செயல்படுத்தினாலே போதும்.
தமிழகத்தில் அதிமுக ஆட்சியில் 46 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் கொடுத்தது. ஆனால்,
திமுக ஆட்சியில் 5 லட்சம் பேருக்கு ஓய்வூதியம் நிறுத்தப்பட்டது. மேலும் அனைத்து ஊடகங்களும் திமுகவினரை மறந்து விட்டனர். அதிமுகவை பற்றி தான் முழுமையாக பேசுகின்றனர்.
விடியா ஆட்சியில் கட்டுமான பொருட்கள் விண்ணைமுட்டும் அளவில் உயர்ந்துள்ளது. மின்சார கட்டணம் உயர்ந்து விட்டது. கிராமப்புறங்களில் வீடுகளுக்கான சொத்து வரியும் உயர்த்தப்பட்டது. மேலும், மக்களுக்கு அடுத்த பரிசாக பஸ் கட்டண உயர்வு ஏற்படப் போகிறது.
தற்போது பள்ளிக்கல்வித்துறை பாலியல் துறையாக மாறி வருகிறது. திமுகவினர் கூட்டுக் கொள்ளை அடிப்பது போல், மாணவிகளை கூட்டுப் பாலியல் பலாத்காரங்கள் செய்வது அதிகரித்து விட்டது. தமிழகத்தில் உள்ள அனைத்து மாவட்ட மருத்துவமனை அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருந்துகளின் தட்டுப்பாடு அதிகமாக உள்ளது. உயிர் காக்கும் மருந்துகள் கூட அரசு மருத்துவமனையில் இல்லை. ஏழை, எளிய மக்களை காக்கும் மருந்தை கொள்முதல் செய்து வாங்குவதை விட சுகாதாரத் துறை அமைச்சருக்கு வேறு என்ன வேலை உள்ளது.
துப்பில்லாத அரசு.
தற்போது பதவி பயத்தில் திமுக முதலமைச்சர் தூக்கமின்றி தவிக்கிறார். அரசு மீது மக்களுக்கு உள்ள கோபத்தை மறைக்க இந்தி திணிப்பு போராட்டத்தை கையில் எடுத்துள்ளது. ஸ்டாலின் மகள் நடத்தும் சன் சைன் பள்ளியில் தமிழில் பேசினால் 500 ரூபாய் அபராதம். அப்பள்ளியில் ஹிந்தி கட்டாயமாக கற்றுக்கொள்ள வேண்டும் என கூறுகின்றனர். நாடாளுமன்ற மற்றும் சட்டமன்ற தேர்தல் ஒரே சமயத்தில் வரும். மீண்டும் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொற்கால ஆட்சி அமையும், எனக் கூறினார்.
இந்நிகழ்ச்சியில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் முருகுமாரன், சிவசுப்பிரமணியன், அனைத்து உலக எம்ஜிஆர் மன்ற செயலாளர் முருகமணி, தலைமைக் கழக பேச்சாளர்கள் தில்லை கோபி, தர்மராஜன், நகர செயலாளர் சந்திரகுமார் மற்றும் நகர ஒன்றிய பேரூரர் கழக நிர்வாகிகள் என பலரும் கலந்து கொண்டனர்.