வெட்கத்தை விட்டு சொல்றேன்… மத்திய அரசைப் பார்த்து பயம் இருக்கு… அதிமுக – திமுக அண்ணன் தம்பி மாதிரி… அமைச்சர் கேஎன் நேரு ஓபன் டாக்..!!
Author: Babu Lakshmanan31 October 2022, 1:09 pm
திருச்சி : மத்திய அரசைக் கண்டு தமிழக அரசு அதிகாரிகள் பயப்படுவதாக நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு தெரிவித்துள்ளார்.
திருச்சி சத்திரம் பேருந்து நிலையம் அருகில் உள்ள கலைஞர் அறிவாலயத்தில் மத்திய மாவட்ட திமுக செயல்வீரர்கள் கூட்டம் இன்று நடைபெற்றது. இந்த கூட்டத்திற்கு மாவட்ட அவைத் தலைவர் தர்மலிங்கம் தலைமை தாங்கினார். திருச்சி தெற்கு மாவட்ட செயலாளரும், தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, வடக்கு மாவட்ட செயலாளர் காடுவெட்டி தியாகராஜன், மத்திய மாவட்ட செயலாளர் வைரமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இக்கூட்டத்தில் தமிழக திமுக தலைமைக் கழக முதன்மைச் செயலாளரும் நகராட்சி நிர்வாக துறை அமைச்சருமான கே நேரு சிறப்புரையாற்றினார். அப்போது, அவர் பேசியதாவது :-நாடாளுமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்றிடும் வகையில் அனைத்து வாக்குச்சாவடி மையங்களுக்கும் கமிட்டி அமைத்து தேர்தல் பணியினை விரைவாக தொடங்கிட வேண்டும்.
மேலும், வாக்காளர் பட்டியலில் புதிதாக வாக்காளர்களை சேர்த்தல் மற்றும் இதர பணிகளுக்கு சிறப்பு முகாம் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் நவம்பர் மாதம் 12, 13, 26 மற்றும் 27 ஆகிய தினங்களில் நடைபெற இருக்கிறது. இந்த சிறப்பு முகாமில் கழக நிர்வாகிகள் அனைவரும் தவறாது கலந்து கொண்டு வாக்காளர் பட்டியலை சரி பார்க்கும் பணியினை மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் எம்ஏல்ஏகள் பழனியாண்டி, சவுந்தர பாண்டியன், கதிரவன், முன்னாள் எம்எல்ஏக்கள் பரணிகுமார், அன்பில் பெரியசாமி, கே.என்.சேகரன், பகுதி செயலாளர்கள் காஜா மலை விஜி, முத்து செல்வம் மற்றும் மாநகர், மாவட்ட நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசும்போது :- தமிழக கவர்னர், எதிர்கட்சியை போல் செயல்படுகிறார். திமுக ஆட்சிக்கு அவப்பெயரை உண்டாக்கும் நோக்கத்தோடு பா.ஜ.கவினர் செயல்பட்டு கொண்டிருக்கிறார்கள். அ.தி.மு.க இரண்டாக பிரிந்துள்ளது. அவர்கள் இடத்தை பிடித்து விட வேண்டும் என்கிற நோக்கத்தில் பா.ஜ.க.வினர் அ.தி.மு.கவை ஒன்று சேர விடாமல் பார்த்து கொள்கிறார்கள்.
இன்று உள்ள அதிகாரிகள் மத்திய அரசுக்கு பயந்து கொண்டு இருக்கிறார்கள். எனவே, நாம் இப்பொழுது பலமாக இருப்பதை போல் இருந்து நாடாளுமன்ற தேர்தலில் பணியாற்றி 40 இடங்களிலும் வெற்றி பெற வேண்டும். திருச்சியில் வெற்றி பெற்றால் அது தமிழ்நாட்டின் அனைத்து இடங்களின் வெற்றியையும் தீர்மானிக்கும், என்றார்.
தொடர்ந்து பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது :- நேற்று மற்ற நிகழ்ச்சிகளை முடித்துவிட்டு நான் சென்னைக்கு சென்றேன். அப்போது எனக்கு தொலைபேசியில் நம்முடைய கழகத்தினுடைய முதன்மை செயலாளர் தொடர்பு கொண்டு நாளை மத்திய மாவட்ட செயல் வீரர் கூட்டம் நடைபெற இருக்கின்றது. நீ கண்டிப்பாக வரவேண்டும் என்று சொன்னார்.
அப்போது, நாளைக்கு எனக்கு சென்னையில் 10:00 மணிக்கு ஒரு நிகழ்ச்சி, 3 மணிக்கு ஒரு நிகழ்ச்சி இருக்கு முடிச்சிட்டு நாளை இரவு தான் திருச்சி வருவேன் என்று சொன்னென். நீ வந்தால் நல்லா இருக்கும் என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணி விட்டார். பின்பு அடுத்த நிமிஷம் எங்களுடைய துறை சார்ந்திருக்கின்ற அதிகாரிகளிடம் பேசினேன். நான் ஒன்னே ஒன்னு தான் சொன்னேன். தொலைபேசியில் அழைத்து முதல்ல நம்முடைய நிகழ்ச்சிகள் அனைத்தையும் இரண்டு நாள் தள்ளி வைங்கன்னு சொல்லிட்டு, மறுபடியும் தொலைபேசியில் சொன்னேன், நான் கண்டிப்பா நாளைக்கு வந்துவிடுகிறேன் என்று.
தேர்தல் முன்பாக எத்தனை இடங்கள் நாம் வெற்றி பெறுவோம். அது எப்படி எல்லாம் நாம் வெற்றி பெற வேண்டும் என்பதை சொன்னது, அப்படியே நடந்தது. ஏன் என்றால் சொன்னவர் ஏதோ ஆறுதல் சொல்பவர் அல்ல, ஆற்றல்மிகு செயலாளர் நம்முடைய அமைச்சர். அவருடைய அந்த அனுபவம் அவர் சொல்ல வைத்திருக்கின்றது. திருச்சி மாவட்டம் என்ன நினைக்கிறது, அதுதான் தமிழ்நாடு நினைக்கும். அப்படின்னு நம்முடைய அமைச்சர் சொன்னார் அது உண்மை.
எங்களை பொறுத்தவரைக்கும், எங்களது திருச்சி தெற்கு மாவட்ட கழகத்தை பொறுத்தவரைக்கும், நாங்கள் அவரை பார்ப்பது ஒரு துரோணாச்சாரியாக தான் பார்க்கின்றோம். அமைச்சர் நேரு ஏகலைவன் தான். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40க்கு 40 தொகுதிகளில் வெற்றி பெற நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயல்பட வேண்டும். குறிப்பாக திருச்சி மாவட்டத்தில் அனைத்து இடங்களையும் கட்சி நிர்வாகிகள் கட்சியை பலப்படுத்த உழைக்க வேண்டும்.
தமிழ்நாட்டில் மதுரை, கோயம்புத்தூர் போன்ற பெரிய மாநகராட்சி போன்று, திருச்சி விரைவில் வளர்ச்சி அடையும். அதில் எந்தவிதமான சந்தேகமும் இல்லை. திருச்சி மாவட்டத்தை பொருத்தவரை அமைச்சர் நேரு என்ன சொல்கிறார்களோ, அதுதான் நடக்கும். அதற்கு அனைவரும் கட்டுப்பட்டு உறுதுணையாக செயல்படுவோம், என்றார்.