அண்ணாமலை கைதுக்கு எதிர்ப்பு… பல்வேறு இடங்களில் பாஜகவினர் போராட்டம்!!

Author: Udayachandran RadhaKrishnan
1 November 2022, 8:52 pm

சென்னையில் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கைது செய்யப்பட்டதை கண்டித்து கோவை காந்திபுரம் பகுதியில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பாஜகவினர் 200க்கும் மேற்பட்டோர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பகுதியில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை தலைமையில் பெண்களை இழிவு படுத்தி பேசிய திமுகவினர் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

காவல்துறையினரின் தடையை மீறி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதால் அண்ணாமலை உள்ளிட்ட பாஜக வினர் கைது செய்யப்பட்டனர்.இந்த கைது நடவடிக்கையை கண்டிக்கும் வகையில் கோவை காந்திபுரம் பகுதியில் பாரதிய ஜனதா கட்சியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அக்கட்சியின் மாவட்ட தலைவர் பாலாஜி உத்தம ராமசாமி தலைமையில் பெண்கள் உட்பட 200க்கும் மேற்பட்டோர் சித்தாபுதூர் பகுதியில் இருந்து ஊர்வலமாக சென்று காந்திபுரம் நகர பேருந்து நிலையம் முன்பாக திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்போது பெண்களை இழிவு படுத்தி பேசிய திமுகவினர் மீது எந்தவித நடவடிக்கையும் எடுக்காத காவல்துறையினர், அதை கண்டித்து போராட்டம் நடத்திய பாஜக மாநில தலைவர் அண்ணாமலையை மட்டும் கைது செய்தது ஏன் என கேள்வி எழுப்பி முழக்கங்களை எழுப்பினர்.


இதையடுத்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட பாஜகவினரை காவல்துறையினர் கைது செய்தனர். பாஜகவினரின் திடீர் மறியல் போராட்டம் காரணமாக காந்திபுரம் பகுதியில் சுமார் 20 நிமிடத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

  • Pushpa 2 vs Mufasa collection புஷ்பா2-க்கே பயம் காட்டிய முஃபாஸா…வசூலில் முரட்டு சாதனை..!
  • Views: - 467

    0

    0