உங்களுக்கு தேவதூதர்கள் என்ற நினைப்பா..? பொதுமக்களை கெட்ட வார்த்தையில் திட்டிய அமைச்சர் பொன்முடிக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம்!!

Author: Babu Lakshmanan
2 November 2022, 1:28 pm

சென்னை : பொதுமக்களில் ஒருவரை தகாத வார்த்தையில் திட்டிய அமைச்சர் பொன்முடிக்கு மக்கள் நீதி மய்யம் கண்டனம் தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நீதி மய்யம் கட்சியின் தொழிலாளர் நல அணியின் மாநில செயலாளர் பொன்னுசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது ;- விழுப்புரம் மாவட்டத்தில் திருவெண்ணைநல்லூர் அடுத்த சித்தலிங்க மடம் கிராமத்தின் எல்லையை பிரித்து எடப்பாளையம் தனி ஊராட்சியோடு சேர்க்கும் பணிகளை கண்டித்து சித்தலிங்க மடம் பகுதியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்களிடையே பேச்சுவார்த்தை நடத்தச் சென்ற உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி அவர்கள் அங்கே போராடிய பொதுமக்களில் ஒருவரைப் பார்த்து “போடா மயிறு” என தரக்குறைவான வார்த்தையை பயன்படுத்தி திட்டியிருப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

பொறுப்புள்ள அமைச்சரான பொன்முடி அவர்கள் பொறுப்பற்ற வகையில் சாமானிய மக்களை பார்த்து அவ்வாறு திட்டியதற்காக அவர் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும்.

மேலும் ஏற்கனவே இதே விழுப்புரம் மாவட்டத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன் நியாயவிலைக் கடை கட்டடத் திறப்பு விழாவின் போது ஒன்றியக் குழு தலைவரை பார்த்து “ஏம்மா…நீ எஸ்.சி தானே…!” என தாழ்த்தப்பட்ட சமூகத்தைச் சேர்ந்தவர் என்றால் தீண்டத்தகாவர் என்கிற ரீதியில் சாதியை குறிப்பிட்டு பொது நிகழ்வில் கேள்வி எழுப்பி சர்ச்சையை ஏற்படுத்தியவர், மகளிருக்கான இலவச பேருந்து திட்டத்தை வைத்து “பெண்கள் அரசு பேருந்தில் ஓசி பயணம்” செல்வதாக கூறி இலவச பேருந்து சேவையை பயன்படுத்தும் மகளிரையும் இழிவாக சித்தரிக்கும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியதோடு தற்போது போராட்டம் நடத்திய நூற்றுக்கணக்கான மக்கள் மத்தியில் ஒருவரை பார்த்து “போடா மயிறு” என மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் பேசியிருப்பதன் மூலம் பொன்முடி அவர்கள் பொறுப்புமிக்க அமைச்சர் பதவி வகிக்க தகுதியற்றவர் என்பதை மீண்டும், மீண்டும் நிரூபித்து வருகிறார்.

பொதுமக்கள் வரிப்பணத்தில், குளு, குளு வசதி கொண்ட, தேசிய கொடி பறக்க, சைரன் பொறுத்திய வாகனத்தில் பயணித்தால் வாக்களித்த பொதுமக்களை எப்படி வேண்டுமானாலும் நடத்தலாம் என்கிற அதிகார மமதையோடு உலா வரும் பொன்முடி போன்ற திமுக அமைச்சர்கள் தொடர்ச்சியாக இது போன்று இழிவாக பேசுவதை மனச்சாட்சி உள்ள எவராலும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள முடியாது.

ஆட்சி அதிகாரத்தில் இருந்தால் தாங்கள் வானத்தில் இருந்து வந்துதித்த தேவதூதன் என்கிற எண்ணத்தோடு, தாங்கள் தான் சர்வ வல்லமை பொருந்தியவர்கள் என்கிற எண்ணமும் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி போன்ற திமுக அமைச்சர்களின் ஆள்மனதில் இருக்குமானால் அதனை அவர்கள் உடனடியாக மாற்றிக் கொண்டு, தங்களை திருத்திக் கொள்ள வேண்டும் எனவும், தொடர்ந்து பொதுமக்களை கிள்ளுக்கீரையாக நினைத்து சர்ச்சைக்குரிய வகையில் பேசுவதையே வாடிக்கையாக கொண்டு செயல்பட்டு வரும் தமிழக அமைச்சர்களுக்கு வாய்ப்பூட்டும், கடிவாளமும் போட்டு அவர்களை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் மக்கள் நீதி மய்யம் தொழிலாளர் நல அணி சார்பில் தமிழக முதல்வர் வலியுறுத்துகிறோம், எனக் குறிப்பிட்டுள்ளார்.

  • Raghuvaran Fall in love With Famous Actress பிரபல நடிகரின் மனைவியை உருகி உருகி காதலித்த ரகுவரன் : வெறுத்துப் போய் குடிக்கு அடிமையான அவலம்!