கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி கவசம் பாடியது ஏன் தெரியுமா..? அமைச்சர் செந்தில்பாலாஜிக்கு பதிலடி கொடுத்த அர்ஜுன் சம்பத் !!

Author: Babu Lakshmanan
2 November 2022, 9:20 pm

கோவை : கோவை கோட்டை ஈஸ்வரன் கோவிலில் பிரசித்தி பெற்ற முருகப்பெருமான் சன்னதி இருப்பது தெரியாமல் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று, இந்து மக்கள் கட்சி தலைவர் அர்ஜூன் சம்பத் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் அவர் பேசியதாவது :- கோவைக்கு பொறுப்பு அமைச்சராக இருக்கும் அமைச்சர் செந்தில் பாலாஜி ஒரு முறைகூட கோட்டை ஈஸ்வரன் கோவிலுக்கு வந்து தரிசனம் செய்ததில்லை போர் இருக்கிறது. இக்கோவிலில், மூலவர் சங்கமேஸ்வரர், அம்பாள் அகிலாண்டேஸ்வரி சன்னதிகளுக்கு மத்தியில் சண்முக சுப்பிரமணிய சுவாமி சன்னதி அமைந்துள்ளது. இதை சோமாஸ்கந்தர் வடிவம் என்பர்.

சுப்பிரமணிய சுவாமி கருவறையில், 6 முகங்களுடன், 12 கைகளுடன் மயில் மேல் முருகன் சூரனை வதம் செய்யும் கோலத்தில் காட்சி அளிக்கிறார். நாட்டில் வேறு எங்கும் இப்படி ஒரு தோற்றத்தை காண முடியாது. சத்ரு சம்ஹார மூர்த்தியாக, சூரனை வதம் செய்யும் மூர்த்தியாக, அவரது ஆறுமுகங்களிலும் வெற்றி முகம் ஒரே திசையை நோக்கி காட்சியளிக்கிறார்.

இக்கோவில் முருகன் சன்னதியில், கந்த சஷ்டி விழா, திருக்கல்யாண உற்சவம் இப்போது தான் நடந்து முடிந்திருக்கிறது. முருகனுக்கு தைப்பூச தேரோட்டமும் ஆண்டு தோறும் நடத்தப்படுகிறது. இது தெரியாமல் ‘ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி கவசம் பாடியதாக’ பேசியிருக்கிறார் அமைச்சர் செந்தில் பாலாஜி. கோவையை காத்த கோட்டை ஈஸ்வரன் கோவிலில் கந்த சஷ்டி விரதத்துக்கு ஒரு நாளுக்கு முன்பாகவே சூர சம்ஹாரம் நடந்துள்ளது.

மிகவும் சக்தி வாய்ந்த வரலாற்று பெருமை மிக்க இந்த திருக்கோவில் குறித்து எதுவும் தெரியாமல், பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன், அவரை சிறுமைப்படுத்தும் எண்ணத்தில் அமைச்சர் பேசியுள்ளார். தரம் தாழ்ந்து பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, மன்னிப்பு கோர வேண்டும். அவரை கண்டித்து இந்து மக்கள் சார்பில் ஜனநாயக அறப்போராட்டம் நடத்தப்படும், என அவர் தெரிவித்துள்ளார்.

  • goundamani does not eat in home said by bayilvan கவுண்டமணியிடம் இருந்த மர்மம்? அந்த சாப்பாட்டுல என்ன இருக்கு? பின்னணியை உடைத்த பிரபலம்…