கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட 12 நாளே ஆன பச்சிளம் குழந்தைக்கு பாலூட்டிய பெண் காவலர் : பாராட்டிய நீதிமன்றம்.. நெகிழ வைத்த சம்பவம்!!
Author: Udayachandran RadhaKrishnan3 November 2022, 1:49 pm
கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பச்சிளம் குழந்தைக்கு போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் பாராட்டை பெற்று தந்தது.
கேரளாவில் கடத்தல் வழக்கில் மீட்கப்பட்ட பிறந்து 12 நாட்களே ஆன பச்சிளம் குழந்தைக்கு பெண் போலீஸ் அதிகாரி ரம்யா பாலூட்டி பாதுகாத்த சம்பவம் அவருக்கு அனைத்து தரப்பிலும் பாராட்டை பெற்றுத்தந்தது.
இந்த நிலையில், கேரள ஐகோர்ட்டு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் பெண் போலீஸ் அதிகாரி ரம்யாவை பாராட்டியுள்ளார். சிவில் போலீஸ் அதிகாரி ரம்யா காட்டிய இரக்கத்தை அவர் வெகுவாக பாராட்டினார்.
அவரிடம் ஒப்படைக்க மாநில காவல்துறைத் தலைவருக்கு சான்றிதழை அனுப்பியுள்ளார். இது குறித்து போலீஸ் அதிகாரி ரம்யாவுக்கு நீதிபதி தேவன் ராமச்சந்திரன் எழுதிய கடிதத்தில், நீங்கள் இன்று, காவல் துறையின் சிறந்த முகமாக இருக்கிறீர்கள். ஒரு சிறந்த அதிகாரி மற்றும் உண்மையான தாய் – நீங்கள் இந்த இரு கடமையையும் செய்துள்ளீர்கள்! வாழ்க்கை என்னும் அமிர்தம் தெய்வம் தந்த ஒரு வரம். அதை ஒரு தாயால் மட்டுமே கொடுக்க முடியும்.
பணியில் இருக்கும் போது நீங்கள் அதை வழங்கினீர்கள். அத்துடன், எதிர்காலத்திற்கான மனித நேயத்தின் நம்பிக்கையை எங்கள் அனைவரிடத்திலும் உயிர்ப்புடன் வைத்திருக்க உதவினீர்கள். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
இதனிடையே, போலீஸ் அதிகாரி ரம்யா மற்றும் அவரது குடும்பத்தினரையும் மாநில காவல்துறைத் தலைவர் அனில் காந்த், காவல்துறை தலைமை அலுவலகத்திற்கு அழைத்து, பாராட்டுச் சான்றிதழை வழங்கினார். அவரது செயல்கள், போலீஸ் படையின் நற்பெயரை உயர்த்தியது என்று குறிப்பிட்டார்.