கோலி ‘போலி பீல்டிங்’ செய்தது 100% உண்மை : வங்கதேச அணிக்கு ஆதரவாக களமிறங்கிய இந்திய அணியின் முன்னாள் வீரர்!!
Author: Udayachandran RadhaKrishnan4 November 2022, 7:26 pm
டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் இந்தியா-வங்காளதேசம் அணிகள் மோதின. இந்த போட்டியில் இந்திய அணி டக்ஒர்த் லூயிஸ் முறைப்படி 5 ரன்கள் வித்தியாசத்தில் திரில் வெற்றி பெற்றது.
இந்த போட்டி முடிந்த பிறகு விராட் கோலி மீது வங்காளதேச அணி வீரர் நூருல் ஹசன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்து இருந்தார். அதாவது வங்காளதேச அணியின் இன்னிங்ஸ் போது விராட் கோலி தனது கைகளில் பந்து இல்லாமலேயே ரன் அவுட் செய்ய முயல்வது போன்று நடித்து பேட்ஸ்மேனை குழப்பினார் என்பதே அந்த குற்றச்சாட்டு.
ஆட்டத்தின் 7வது ஓவரில் அக்ஷர் படேல் வீசிய பந்தை லிண்டன் தாஸ் ஆஃப் சைடில் அடித்துவிட்டு ரன் ஓடினார். பந்து நேராக பவுண்டரி எல்லையில் இருந்த அர்ஷ்தீப் சிங்கிடம் சென்றது.
அதனை அவர் தினேஷ் கார்த்திக்கிடம் வீசினார். ஆனால் நடுவே இருந்த விராட் கோலி, பந்து தன் கையில் இல்லை என்ற போதும், ஸ்ட்ரைக்கர் முனைக்கு த்ரோ செய்வது போன்று பாவனை செய்தார்.
இதனால் பேட்ஸ்மேன்கள் குழம்பினர்.இது குறித்து வங்காளதேச வீரர் நூருல் ஹசன் கூறுகையில், நிச்சயமாக மழைக்கு பிறகு மீண்டும் ஆட்டம் தொடங்கியபோது மைதானத்தில் இருந்த ஈரப்பதம் ஆட்டத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது.
ஆனால், இந்தப் போட்டியில் ஒரு போலியான த்ரோ இருந்தது. அதன்மூலம் எங்களுக்கு 5 ரன்கள் கிடைத்திருக்க வேண்டும். ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுவும் எங்களுக்கு கிடைக்கவில்லை என்றார்.
ஐசிசி விதி 41.5.1-படி ஒரு பேட்ஸ்மேனை வேண்டுமென்றே கவனச்சிதறல் செய்ய தூண்டுவது, ஏமாற்றுவது, அவர் ஓடும்போது குறுக்கே சென்று தடையாக நிற்பது போன்றவை தவறாகும். அதற்கு பெனால்டியாக பேட்டிங் அணிக்கு 5 ரன்கள் வழங்கப்பட வேண்டும்.
அதே நேரத்தில் எந்தவொரு கவனச்சிதறல் அல்லது ஏமாற்றுதல் வேண்டுமென்றே செய்யப்பட்டதா இல்லையா என்பதை நடுவர்கள் தீர்மானிக்க வேண்டும் என்று ஐசிசி விதி 41.5.2 கூறுகிறது. ஆனால் நேற்று நடுவர்கள் இதை கவனிக்காததால் களத்தில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என தெரிகிறது.
இந்த நிலையில் இந்திய அணியின் முன்னாள் கிரிக்கெட் வீரர் ஆகாஷ் சோப்ரா, கோலி ‘போலி பீல்டிங்’ செய்ததாக தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்வு குறித்து யூடியூப் வீடியோ ஒன்றில் பேசிய ஆகாஷ் சோப்ரா, ” கோலி பந்தை வீச முயன்ற விதத்தை பார்க்கும் போது அது 100% போலி ஃபீல்டிங் தான் எனத் தெரிகிறது.
நடுவர்கள் அதை பார்த்திருந்தால், வங்காளதேச அணிக்கு ஐந்து ரன்கள் பெனால்டியாக கிடைத்திருக்கும். நாமும் ஐந்து ரன்கள் வித்தியாசத்தில் தான் வெற்றி பெற்று இருந்தோம். ஆனால் நாம் தப்பித்துள்ளோம். ஆனால் அடுத்த முறை யாராவது இதைச் செய்தால் நடுவர்கள் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். வங்காளதேச அணி முறையிட்டது சரியே. ஆனால் இப்போது எதுவும் செய்ய முடியாது என்றார்.