“கையில் காவி கொடி.. கம்பீர உறுதிமொழி..” 3 இடங்களில் மட்டும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி..!
Author: Vignesh6 November 2022, 5:40 pm
சென்னை: 44 இடங்களில் பேரணியை ஒத்திவைத்த நிலையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது.
தமிழகத்தில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு ஊர்வலத்திற்கு அனுமதி வழங்க மறுத்த காவல்துறை உத்தரவுகளை எதிர்த்து ஆர்.எஸ்.எஸ் அமைப்பினர் தொடர்ந்த 50-க்கும் மேற்பட்ட வழக்குகளை விசாரித்த ஐகோர்ட்டு இன்று ஊர்வலத்திற்கு அனுமதி வழங்கும்படி காவல்துறைக்கு உத்தரவிட்டிருந்தது.
ஆனால் அனுமதி வழங்கப்படவில்லை என காவல்துறைக்கு எதிராக ஆர்எஸ்எஸ் நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு, தமிழ்நாட்டில் 44 இடங்களில் அணிவகுப்பு ஊர்வலம் நடத்த ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கு நேற்று அனுமதி அளித்தது.
ஆனால் சுற்றுச்சுவர் அமைந்திருக்கும் மைதானத்தில் மட்டும் ஆர்எஸ்எஸ் பேரணி நடத்த வேண்டும் என 11 நிபந்தனை விதித்தது. இந்த நிலையில் இன்று நடைபெற இருந்த ஆர்எஸ்எஸ் பேரணி தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ் பேரணி நடத்த முடிவு செய்தது.
இதனால் பேரணி நடைபெறும் இடங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர். தற்போது பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கடலூர், கள்ளக்குறிச்சி, பெரம்பலூர் மாவட்டங்களில் ஆர்.எஸ்.எஸ் பேரணி தொடங்கி நடைபெற்றது.
இதேபோல் கள்ளக்குறிச்சி மாவட்டம் கள்ளக்குறிச்சியில் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக சங்கம் (ஆர்.எஸ்.எஸ்) சார்பில் அருட்பெருஞ்சோதி வள்ளலாரின் 200வது பிறந்த ஆண்டையும்,153வது காந்தி ஜெயந்தி விழா மற்றும் சுதந்திரம் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெற்றதை முன்னிட்டு ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு நடந்தது.
கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், கடலூர் ஆகிய 3 இடங்களிலும் நடைபெற்ற ஆர்.எஸ்.எஸ். பேரணி நிறைவு பெற்றது. 44 இடங்களில் பேரணியை ஒத்திவைத்த நிலையில் 3 இடங்களில் மட்டும் ஆர்.எஸ்.எஸ். பேரணி நடைபெற்றது.