நான் என்ன செத்தா போயிட்டேன்.. கண் கலங்கிய சமந்தா : மனதை உருக வைத்த பேட்டி!!
Author: Udayachandran RadhaKrishnan8 November 2022, 3:50 pm
நடிகை சமந்தா நடித்துள்ள யசோதா படத்தை ஹரி மற்றும் ஹரீஷ் ஆகியோர் இணைந்து இயக்கி உள்ளனர். வாடகைத் தாய் முறை குறித்தும் அதன் பின்னணியில் இருக்கும் பிரச்சனைகள் குறித்தும் விளக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டு உள்ளது. இதில் நடிகை சமந்தா வாடகைத் தாயாக நடித்துள்ளார். இப்படத்தில் அவருடன் நடிகை வரலட்சுமியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
நடிகை சமந்தா கடந்த சில மாதங்களாக மயோசிடிஸ் எனும் அரியவகை நோய் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். இதனால் சமூக வலைதளங்களில் இருந்து விலகியே இருந்த அவர், சமீபத்தில் மருத்துவமனையில் டிரிப்ஸ் ஏறியபடி யசோதா படத்திற்கு டப்பிங் பேசிய புகைப்படத்தை வெளியிட்டு தனக்கு ஏற்பட்டுள்ள நோய் பாதிப்பு குறித்து பதிவிட்டிருந்தார்.
அந்த பதிவுக்கு பின்னர் நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இருப்பதாக வெளிவந்த செய்திகள் தன்னை மிகவும் பாதித்ததாக கூறி சமீபத்திய நேர்காணலில் நடிகை சமந்தா கண்ணீர் விட்டு அழுதுள்ளார்.
அதில் அவர் பேசியதாவது : “இந்த காலகட்டத்தில் என்னுடைய சில நாட்கள் நல்லதாக இருக்கும், சில நாட்கள் கெட்டதாக இருந்தன. ஆனால் இவ்வளவு தூரம் நான் கடந்து வந்துவிட்டேன் என்பதை பார்க்கும் போது ஆச்சர்யமாக உள்ளது.
ஆனால் உயிருக்கு ஆபாத்தான நிலையில் என்னுடைய உடல்நிலை இல்லை என்பதை நான் தெளிவுபடுத்த விரும்புகிறேன். நான் உயிருக்கு ஆபத்தான நிலையில் இல்லை. நான் இன்னும் சாகவில்லை. அதுபோன்ற செய்திகள் தேவையற்றது” என தன்னைப்பற்றிய நெகடிவிட்டி குறித்து பேசி அந்த நேர்காணலில் சமந்தா கண்கலங்கியதை பார்த்து ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.