சஞ்சய் ராவத் கைது சட்டவிரோதம்.. பணப்பரிமாற்ற வழக்கில் முகாந்திரமே இல்லை : சிறப்பு நீதிமன்றம் கருத்து!!
Author: Udayachandran RadhaKrishnan9 November 2022, 6:12 pm
பத்ராசால் மோசடி வழக்கில் சஞ்சய் ராவத் எம்.பிக்கு சிறப்பு கோர்ட்டு ஜாமீன் வழங்கியுள்ளது.
மும்பை கோரேகாவ் பகுதியில் உள்ள பத்ரா சால் குடியிருப்பு சீரமைப்பு மோசடியில் நடந்த சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் சிவசேனா தலைமை செய்தி தொடர்பாளரும், மாநிலங்களவை எம்.பி.யுமான சஞ்சய் ராவத் கடந்த ஜூலை மாதம் அமலாக்கத்துறையால் கைது செய்யப்பட்டார்.
அவர் நீதிமன்ற காவலில் மத்திய மும்பையில் உள்ள ஆர்தர் ரோடு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி மனு தாக்கல் செய்திருந்தார்.
மனு மீதான விசாரணையின் போது சஞ்சய் ராவத் எம்.பி.க்கு இந்த முறைகேட்டில் நேரடி தொடர்பு இருப்பதாகவும், அவரும், அவரது குடும்பத்தினரும் பண பலன்களை பெற்றதாகவும் அமலாக்கத்துறை கூறியது.

ஜாமீன் மனு மீதான விசாரணை கடந்த நவம்பர் 2-ம் தேதியுடன் முடிந்தது. இதனை தொடர்ந்து சஞ்சய் ராவத் எம்.பி.யின் நீதிமன்ற காவலை 9-ந் தேதி வரை நீட்டித்த கோர்ட்டு, அன்று ஜாமீன் மனு குறித்த தீர்ப்பு வழங்ப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி இன்று சஞ்சய் ராவத்தின் ஜாமீன் மனு விசாரணைக்கு வந்தது. அப்போது, பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட சஞ்சய் ராவத்துக்கு ஜாமீன் வழங்கி சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது.
சஞ்சய் ராவத் தொடர்பான வழக்கில் ரூ.1,034 கோடி அளவுக்கு முறைகேடு நடந்திருப்பதாக அமலாக்கப் பிரிவு குற்றம்சாட்டியிருக்கிறது. இதில் உத்தவ் தாக்கரே உறவினர் பிரவின் ராவத் ரூ.112 கோடி பெற்றதாக குற்றம்சாட்டப்பட்டிருக்கிறது. இந்த வழக்கில் சஞ்சய் ராவத் மனைவி பெயரிலிருந்த வீட்டை அமலாக்கப் பிரிவு பறிமுதல் செய்திருக்கிறது.
இந்த நிலையில் சஞ்சய் ராவத் மீதான பண்பரிமாற்ற வழக்கில் முகாந்திரமே இல்லாமல் கைது செய்துள்ளதாக சிறப்பு நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.