எப்போ ஐபிஎல் வந்துச்சோ அதில் இருந்து இந்திய அணிக்கு தோல்வி ஆரம்பித்தது : ஆதாரத்துடன் முன்னாள் வீரர் விமர்சனம்!!
Author: Udayachandran RadhaKrishnan11 November 2022, 2:58 pm
8-வது 20 ஓவர் உலகக் கோப்பை தொடரில் இங்கிலாந்து அணி இறுதி போட்டிக்கு முன்னேறியுள்ளது. கோப்பையை வெல்லும் அணிகளுள் ஒன்றாக கருதப்பட்ட இந்திய அணியின் இந்த தோல்வி இந்திய ரசிகர்களை மிகுந்த சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
லீக் சுற்றுகளில் 4 போட்டிகளை வென்ற ஒரே அணி என்ற பெருமையுடன் நாக் அவுட்டில் நுழைந்த இந்திய அணி, இங்கிலாந்து அணியின் ஒரு விக்கெட்டை கூட வீழ்த்த முடியாமல் படுதோல்வியை சந்தித்தது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் ஐபிஎல் அறிமுகப்படுத்தப்பட்டது முதல், இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதை பாகிஸ்தான் ஜாம்பவான் வாசிம் அக்ரம் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்தியாவின் இந்த படுதோல்வி குறித்து முன்னாள் வீரர்கள், ரசிகர்கள், பிரபலங்கள் என பலரும் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவின் படுதோல்வி குறித்து பேசியுள்ள பாகிஸ்தான் ஜாம்பவான் வீரர் வாசிம் அக்ரம், இந்தியன் பிரீமியர் லீக் (ஐபிஎல்) அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, இந்திய அணி 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதில்லை என்பதை சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐபிஎல் இந்தியாவிற்கும் மற்ற அணிகளுக்கும் இடையிலான பெரிய வித்தியாசமாக இருக்கும் என்று அனைவரும் நினைத்தார்கள். ஐபிஎல் 2008ல் தொடங்கியது. அதற்கு முன்பு 2007ல் இந்தியா 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றது.
ஐபிஎல் வந்த பிறகு, இந்தியா ஒரு 20 ஓவர் உலகக் கோப்பையை வென்றதில்லை. அவர்கள் 2011ல் உலகக் கோப்பையை வென்றனர். ஆனால் அது 50 ஓவர்கள் கொண்ட ஒருநாள் போட்டி என்று அவர் கூறியுள்ளார்.