எதிர்க்கட்சிகள் சுமத்தும் விமர்சனங்கள்தான் எனக்கு ஊட்டச்சத்து.. பாஜகவை பார்த்து அவர்களுக்கு பயம் : பிரதமர் மோடி பேச்சு!!
Author: Udayachandran RadhaKrishnan12 November 2022, 7:53 pm
பிரதமர் நரேந்திர மோடி கடந்த இரண்டு தினங்களாக தென் மாநிலங்களில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். நேற்று தமிழகம் வந்த மோடி, திண்டுக்கல்லில் காந்தி கிராம கிராமிய பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் கலந்துகொண்டார். இந்த நிகழ்ச்சியில் முதல்வர் மு.க. ஸ்டாலினும் கலந்துகொண்டார்.
இதனைத் தொடர்ந்து, கர்நாடகா மாநிலம் பெங்களூருக்கு சென்ற மோடி அங்கு அமைக்கப்பட்டிருந்த விமான நிலையத்தின் இரண்டாவது முனையத்தை திறந்து வைத்தார். இதன் தொடர்ச்சியாக, இன்று தெலங்கானாவில் பல மத்திய அரசு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
இந்நிலையில், தெலங்கானா மாநிலம் ஹைதராபாத்தில் பாஜக சார்பில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பிரமதர் மோடி கலந்துகொண்டு உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: தெலங்கானாவில் எங்கு பார்த்தாலும் ஊழல் தலைவிரித்தாடுகிறது. எந்த அரசு அலுவலகங்களுக்கு சென்றாலும் லஞ்சம் கொடுக்காமல் எந்த வேலையையும் முடிக்க முடியவில்லை.
மாநிலத்தில் சட்டம் – ஒழுங்கு சீர்குலைந்து கிடக்கிறது. கொலையும், அராஜகமும் தான் தெலங்கானாவில் அடையாளமாக மாறிப் போயிருக்கிறது. குடும்ப ஆட்சியால் மாநிலம் சீரழிந்து கொண்டிருக்கிறது. இதுதான் மக்களுக்கு நீங்கள் தரும் நல்லாட்சியா? முதல்வர் சந்திரசேகர ராவின் குடும்பத்தினர்தான் அரசியல், ஒப்பந்தம் என அனைத்து துறைகளையும் ஆக்கிரமித்து உள்ளனர்.
டிஆர்எஸ் ஆட்சியில் தெலங்கானா மக்கள் முன்னேறவில்லை. சந்திரசேகர ராவின் குடும்பம்தான் முன்னேறுகிறது. இந்த நேரத்தில் தெலங்கானாவில் உள்ள பாஜகவினருக்கு ஒன்றை கூறிக்கொள்ள விரும்புகிறேன்.
ஆளும் டிஆர்எஸ் கட்சியினர் என்னை என்ன வேண்டுமானாலும் திட்டிக்கொள்ளட்டும். அதற்காக நீங்கள் கோபப்பட வேண்டாம். அவர்களுக்கு இணையாக நீங்களும் தரம் தாழ்ந்து போக வேண்டும். பயத்திலும், விரக்தியிலும் அவர்கள் என்னை திட்டுகின்றனர்.
திட்டு வாங்குவது எனக்கு புதிதல்ல. என்னிடம் பலர் எப்போதும் கேட்கும் கேள்வி ஒன்று உண்டு. எப்படி இத்தனை பணிகளுக்கு மத்தியிலும் நீங்கள் சுறுசுறுப்பாக இருக்கிறீர்கள் என்ற கேள்விதான் அது.
என்னை எதிரியாக நினைப்பவர்கள் எனக்கு விடும் சாபத்தையும், திட்டுகளையும் தினமும் 2-3 கிலோ சாப்பிடுகிறேன். ஆனால், அவை அனைத்தும் எனக்காக சத்துகளாக மாறிவிடுகின்றன. இது, கடவுள் எனக்கு தந்த ஆசிர்வாதம்.
நாட்டிலேயே தகவல் தொழில்நுட்ப மையமாக தெலங்கானா விளங்குகிறது. ஆனால், தெலங்கானா முதல்வர் சந்திரசேகர ராவோ மூட நம்பிக்கைகளின் மொத்த உருவமாக இருக்கிறார். அரசின் முக்கிய முடிவுகள் தொடங்கி, எங்கே வசிக்க வேண்டும், அலுவலகம் எங்கே இருக்க வேண்டும், யாரை அமைச்சராக ஆக்க வேண்டும் என்பது வரை மூட நம்பிக்கைகளை நம்பி முதல்வர் செய்து வருகிறார்.
இது மிகவும் வேதனையாக விஷயம். தெலங்கானா முன்னேற வேண்டுமானால், இந்த மூடநம்பிக்கையை இங்கிருந்து அகற்ற வேண்டும்.
டிஆர்எஸ் உட்பட நாட்டில் உள்ள எதிர்க்கட்சிகள் யாவும் பாஜகவை கண்டு பயப்படுகின்றன.
ஊழலை ஒரு சதவீதம் கூட பாஜக அனுமதிக்காது. அதனால், பாஜகவை மீண்டும் ஆட்சிக்கு வராமல் தடுப்பதற்காக எதிர்க்கட்சிகள் அனைத்தும் ஒன்று சேர முயற்சிக்கின்றன. அவர்கள் மற்ற கட்சிகளை நம்புகிறார்கள். நாங்கள் மக்களை நம்புகிறோம். அவர்கள் பாஜகவை கைவிட மாட்டார்கள். தெலங்கானாவிலும் பாஜக ஆட்சி அமைந்தால் ஊழல் என்ற வார்த்தையை கூட சொல்ல அரசு அதிகாரிகள் பயப்படுவார்கள். இவ்வாறு நரேந்திர மோடி பேசினார்.