தனித் தீவு போல காட்சியளிக்கும் சீர்காழி.. வெள்ளம் வடியாததால் மக்கள் அவதி : நாளை முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் ஆய்வு!!
Author: Udayachandran RadhaKrishnan13 November 2022, 2:22 pm
வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. குறிப்பாக மயிலாடுதுறை மாவட்டத்தில் வரலாறு காணாத அளவில் கனமழை பெய்து வருகிறது.
தொடர்ந்து பெய்த கனமழை காரணமாக சீர்காழி பகுதியில் திரும்பிய திசையெல்லாம் வெள்ளக்காடாக காட்சி அளிக்கிறது. கிட்டத்தட்ட சீர்காழி பகுதியே தனித் தீவு போல் காட்சியளித்து வருகிறது.
மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி, வைத்தீஸ்வரன்கோவில், திருமுல்லைவாசல், சூரைக்காடு, கொள்ளிடம் மற்றும் சுற்று வட்டார கிராமங்களில் மிக அதிக கனமழை பெய்தது.
இதில் சீர்காழியில் மட்டும் 122 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு ஒரே நாளில் குறிப்பாக 6 மணி நேரத்தில் 44 செ.மீ மழை கொட்டி தீர்த்தது. இந்த அதீத கனமழையால் சீர்காழியில் இதுவரை தண்ணீர் தேங்காத குடியிருப்புகளிலும் தண்ணீர் புகுந்தது. இதனால் பொதுமக்கள் பல்வேறு இன்னல்களை சந்தித்து வருகின்றனர்.
இந்த நிலையில் சென்னையில் கனமழையால் ஏற்பட்ட பாதிப்புகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து மயிலாடுதுறை, கடலூர், பூம்புகார், சீர்காழி பகுதிகளில் ஏற்பட்டுள்ள மழை வெள்ள பாதிப்புகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நாளை ஆய்வு செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்காக இன்று இரவு அவர் சீழ்காழி செல்லவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.