ஜி 20 மாநாட்டில் பங்கேற்க இந்தோனேசியா சென்றார் பிரதமர் மோடி : பாலி தீவில் பிரதமருக்கு உற்சாக வரவேற்பு!!
Author: Udayachandran RadhaKrishnan14 November 2022, 10:18 pm
இந்தோனேசியாவின் பாலி நகரில் நாளை மற்றும் நாளை மறுநாள் ஜி20 உச்சி மாநாடு நடைபெறுகிறது. உக்ரைன் போர் மற்றும் அதனால் உலக அளவில் ஏற்பட்டுள்ள தாக்கங்கள் உள்ளிட்ட உலகளாவிய சவால்கள் குறித்து இந்த உச்சிமாநாட்டில் விரிவாக விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தக் கூட்டத்தில் உணவு மற்றும் எரிசக்தி பாதுகாப்பு, டிஜிட்டல் மாற்றம் மற்றும் சுகாதாரம் ஆகிய மூன்று முக்கிய அமர்வுகளில் பிரதமர் மோடி பங்கேற்க உள்ளதாக வெளியுறவுத்துறை செயலாளர் வினய் குவாத்ரா தெரிவித்தார்.
மேலும் உலகப் பொருளாதாரம், எரிசக்தி, சுற்றுச்சூழல், டிஜிட்டல் மாற்றம் குறித்து பிரதமர் மோடியும் மற்ற நாடுகளின் தலைவர்களும் விவாதிக்கவிருப்பதாகவும் குவாத்ரா கூறினார்.
இதுதவிர ஜி20 தலைவர்கள் சிலரையும் மோடி சந்தித்து இருதரப்பு உறவுகள் குறித்து பேச உள்ளார். இந்நிலையில், ஜி20 மாநாட்டில் பங்கேற்க இன்று தனி விமானம் மூலம் புறப்பட்ட பிரதமர் மோடி இந்தோனேசியா சென்றடைந்தார்.