அரசு விழாவுக்கு 2 மணிநேரம் தாமதமாக வந்த அமைச்சர்… கொளுத்தும் வெயிலில் நின்று சடைஞ்சு போன மக்கள்… !!
Author: Babu Lakshmanan19 November 2022, 12:50 pm
தருமபுரி ; காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியம் கும்பாரஹள்ளி ஊராட்சியில் அமைச்சர் வருகைக்காக இரண்டு மணி நேரம் வெயிலில் காத்திருந்த பொதுமக்கள் அதிருப்தியடைந்தனர்.
தருமபுரி மாவட்டம் காரிமங்கலம் ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட கும்பாரஹள்ளி ஊராட்சியில் வருவாய் நிதி திட்டத்தின் கீழ் ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சி துறை சார்பில் ரூ 80 லட்சம் மதிப்பீட்டில் புதிய சமுதாயக்கூடம் மற்றும் உணவருந்தும் கூட கட்டிடம் கட்டப்பட்டது. இந்தக் கட்டிடத்தை வேளாண்மை துறை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் அவர்கள் இன்று திறந்து வைத்தார்.
இந்த நிலையில், அமைச்சர் வருகைக்காக பெண்கள் மற்றும் பொதுமக்கள் சுமார் இரண்டு மணி நேரத்திற்கு மேலாக வெயிலில் நின்று கொண்டிருந்தனர். இரண்டு மணி நேரத்துக்கு மேல் கால் கடுக்க வெயிலில் நின்றிருந்த பெண்கள் நின்றுருந்த இடத்திலேயே வெயிலில் அமர்ந்தனர்.
அதன்பின் அமைச்சர் வருகை தந்து புதிய கட்டிடத்தை திறந்து வைத்த பின் பட்டாசு வெடித்ததில் கீழ் கொல்லுப்பட்டியை சேர்ந்த முனியம்மாள் என்பவருக்கு மண்டையில் அடிபட்டு ரத்த காயம் ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு சிறிது நேரம் பதற்றம் நிலவியது.