மைனர் மாணவிக்கு கட்டாய முத்தம்… ராகிங் என்ற பெயரில் கல்லூரி மாணவர்கள் அத்துமீறல் : இணையத்தில் வெளியான ஷாக் வீடியோ!!
Author: Udayachandran RadhaKrishnan19 November 2022, 5:12 pm
ஒடிசா மாநிலம் கஞ்ஜம் மாவட்டத்தில் உள்ள அரசு கல்லூரியில், சீனியர் மாணவ, மாணவிகள் சேர்ந்து ராகிங் என்ற பெயரில் முதலாமாண்டு மாணவர் ஒருவரை கட்டாயப்படுத்தி சக மாணவிக்கு முத்தம் கொடுக்க வைத்துள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அந்த வீடியோவில் மாணவி எழுந்து செல்ல முயற்சிக்கும் போது, அவரை மற்றொரு சீனியர் மாணவி வற்புறுத்தி அமர வைப்பதும், பின்னர் அந்த முதலாமாண்டு மாணவனை அழைத்து அவனை அந்த மாணவிக்கு முத்தம் கொடுக்கச் செய்வதும் பதிவாகியுள்ளது.
இதற்கு மறுப்பு தெரிவித்த மாணவனை மற்றொரு மாணவன் தாக்குவதும், சுற்றியிருந்த மாணவிகள் அங்கு நடப்பதை தடுக்காமல், சிரித்தபடி வேடிக்கை பார்ப்பதும் அந்த வீடியோவில் பதிவாகி உள்ளது.
கல்லூரியின் மதிய இடைவேளையின் போது இந்த சம்பவம் நடந்ததாக கூறப்படுகிறது. இதில் பாதிக்கப்பட்ட மாணவி அந்த கல்லூரியில் ஒரு மாதத்திற்கு முன்பு தான் சேர்ந்துள்ளார் என்பதும் அவர் 18 வயது நிரம்பாத மைனர் பெண் என்பதும் தெரியவந்துள்ளது.
இந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாக பரவிய நிலையில், சம்பவத்தில் ஈடுபட்ட 12 மாணவ, மாணவிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களை கல்லூரியில் இருந்து வெளியேற்றி கல்லூரி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
அது மட்டுமின்றி இதில் சம்பந்தப்பட்ட 5 மாணவர்கள் மீது போக்சோ பிரிவின் கீழ் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த செயலில் ஈடுபட்ட மாணவ, மாணவிகளை இறுதித் தேர்வு எழுத அனுமதிக்கக் கூடாது என உயர்கல்வித்துறைக்கு பரிந்துரை செய்ய இருப்பதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்துள்ளது.
அதே சமயம் அந்த வீடியோவில் கையில் கட்டையுடன் காணப்படும் 24 வயது மாணவர் அபிஷேக் நகாக் என்பவர், ஏற்கனவே குற்றப்பின்னணி கொண்டவர் ஆவார்.
அவர் மீது ஒரு பாலியல் அத்துமீறல் வழக்கு நிலுவையில் இருப்பதாகவும், அவர் பிஜு ஜனதா தளம் கட்சியின் மாணவர் அமைப்பில் உள்ளவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.