மங்களூரு வெடிவிபத்து சம்பவத்தில் கிடைத்தது துப்பு : ஊட்டியை சேர்ந்த ஆசிரியரிடம் போலீசார் தீவிர விசாரணை!!
Author: Udayachandran RadhaKrishnan20 November 2022, 6:04 pm
கோவை கார் சிலிண்டர் வெடிவிபத்தின் வெப்பம் குறைவதற்குள் கர்நாடக மாநிலம், மங்களூரில் குக்கர் வெடிகுண்டு வெடித்து ஆட்டோ சிதறிய சம்பவம் தென் மாநிலங்களில் பதற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறது.
கர்நாடக மாநிலம், மங்களூர் சாலையில் நேற்று மாலை சென்று கொண்டிருந்த பயணிகள் ஆட்டோ ஒன்று திடீரென வெடித்துச் சிதறியது. வெடிவிபத்து காரணமாக அந்தப் பகுதி கடும் புகைமூட்டமானது. இதில் ஆட்டோ ஓட்டுநர், ஆட்டோவில் பயணம் செய்த பயணி இருவரும் படுகாயமடைந்தனர்.
இருவரையும் மீட்ட மக்கள், மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். விபத்து ஏற்பட்ட பகுதிக்கு விரைந்து வந்த காவல்துறையினர் மற்றும் தடயவியல் நிபுணர்கள் சோதனை நடத்தினர்.
வெடித்துச் சிதறிய ஆட்டோவுக்குள் சிதைந்த நிலையில் குக்கர் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குக்கரில் வெடிபொருள்களை வெடிக்க வைத்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த நிலையில், வெடிவிபத்து குறித்து தனது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் கர்நாடக மாநில டி.ஜி.பி, “இந்த ஆட்டோ வெடிவிபத்து சம்பவம் திட்டமிட்ட சதி. குண்டுவெடிப்பு தற்செயலானது அல்ல. கடுமையான சேதத்தை ஏற்படுத்தும் நோக்கத்துடன் செய்யப்பட்ட பயங்கரவாத செயல்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதனைத் தொடர்ந்து கர்நாடக மாநில காவல்துறையும், மத்திய ஏஜென்சிகளும் இணைந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றன. வாகனச் சோதனையையும் தீவிரப்படுத்தியிருக்கின்றனர்.
இந்தச் சம்பவத்தில் காயமடைந்த நபர் ஒருவர் பயன்படுத்திய செல்பேனின் சிம் கார்டு ஊட்டி அருகில் உள்ள குந்தசப்பை கிராமத்தைச் சேர்ந்த நபரின் ஆதார் எண்ணைக் கொண்டு வாங்கப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது. அதனால், போலீஸார் அந்த நபரிடம் கோவையில் வைத்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.