தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் நேரில் அஞ்சலி : முழு அரசு மரியாதையுடன் உடல் அடக்கம்?

Author: Udayachandran RadhaKrishnan
22 November 2022, 10:23 am

தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார்.

தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் அவ்வை நடராஜன் வயது மூப்பின் காரணமாக சென்னையில் நேற்று காலமானார். அவருக்கு வயது 85.

அவ்வை நடராஜன் மறைவுக்கு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில், சென்னை அண்ணா நகர் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள தமிழறிஞர் அவ்வை நடராஜன் உடலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்.

மேலும் அவரது குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆறுதல் கூறினார். அப்போது கவிஞர் வைரமுத்து உடனிருந்தார். அவ்வை நடராஜன் 1936 ஆம் ஆண்டு திருவண்ணாமலை மாவட்டத்தில் (அன்றைய வட ஆற்காடு மாவட்டம்) உள்ள செய்யாறு எனும் ஊரில் பிறந்தார்.

மதுரை தியாகராசர் கல்லூரியில் இவர் தமிழில் முதுகலை பட்டம் பெற்றார். சென்னை பச்சையப்பன் கல்லூரியில் “சங்க இலக்கியத்தில் பெயரிடு மரபு” என்னும் பொருளில் ஆய்வு செய்து 1958ஆம் ஆண்டில் ஆய்வியல் நிறைஞர் பட்டம் பெற்றார்.

அதன் பின்னர் “சங்க காலப் புலமைச் செவ்வியர்” என்னும் பொருளில் ஆய்வு செய்து முனைவர் பட்டம் பெற்றார். தமிழறிஞர் அவ்வை நடராஜன் 1992 முதல் 1995 வரை தஞ்சாவூர், தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் பொறுப்பு வகித்தார்.

அதன் பிறகு, 2014 ஆம் ஆண்டில் செம்மொழித் தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராக இருந்தார். 2011ம் ஆண்டு இவருக்கு நாட்டின் நான்காவது உயரிய விருதான பத்ம ஸ்ரீ விருதை மத்திய அரசு வழங்கி கவுரவித்தது.

இதனிடையே அவ்வை நடராஜன் உடல் அரசு மரியாதையுடன் முழு அடக்கம் செய்யப்படும் என தமிழக அரசு தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.

  • Vidamuyarchi shooting completed அஜித்தே..இனி நம்ம ஆட்டம் தான்..விடாமுயற்சி படப்பிடிப்பு ஓவர்…இயக்குனர் வெளியிட்ட பதிவு..!
  • Views: - 423

    0

    0