தீபாவளி சீட்டு நடத்தி ரூ.24 கோடி மோசடி ; பெண் உள்பட 4 பேர் கைது… கள்ளத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்கள் பறிமுதல்!!
Author: Babu Lakshmanan22 November 2022, 9:54 pm
திருவள்ளூர் ; திருவள்ளூர் அருகே தீபாவளி சீட்டு நடத்தி ரூ. 24 கோடி வரை மோசடி செய்த வழக்கில் உரிமையாளர் ஜே.பி.ஜோதி மற்றும் அவரது மனைவி உள்ளிட்ட 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
திருவள்ளூர் மாவட்டம் தாமரைபாக்கம் அருகே மாலந்தூர் கிராமத்தை சேர்ந்தவர் ஜே.பி. ஜோதி(33). இவர் தாமரைப்பாக்கம் கூட்டுச் சாலையில் தீபாவளி சீட்டு நடத்தி வந்தார். மாதம் ரூ.1000 செலுத்தினால் 4 கிராம் தங்கம் மற்றும் 40 கிராம் வெள்ளி நாணயத்துடன் பட்டாசு, வெள்ளி பாத்திரங்கள் மளிகை பொருட்கள் வழங்குவதாகவும், மாதம் 500 செலுத்தினால் 2 கிராம் தங்கத்துடன் ஏனைய பொருட்களும் வழங்கப்படும் என்று அறிவித்து பணம் வசூலித்து வந்துள்ளார்.
திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள பல்வேறு பகுதிகளில் 500-க்கும் மேற்பட்ட முகவர்களை நியமித்து தீபாவளி பண்டு சீட்டுக்கு பணத்தை வசூலித்தார். தீபாவளி நெருங்கியும் பணம் கட்டியவர்களுக்கு உரிய பொருட்கள் வழங்காமல் இருந்தார். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகம் மற்றும் ஆட்சியர் அலுவலகத்தில் புகார் கொடுத்தனர்.
இதனால் ஜே.பி.ஸ்டார் ஏஜென்சி கடைகள் அனைத்தையும் மூடிவிட்டு உரிமையாளர் ஜே.பி.ஜோதி தலைமறைவாகிவிட்டார். இந்நிலையில் பொதுமக்கள் மற்றும் முகவர்கள் கொடுத்த புகாரையடுத்து, மாவட்ட எஸ்பி பா. சிபாஸ் கல்யாண் தலைமையில் இரண்டு தனிப்படை அமைத்து தேடி வந்தனர்.
இந்நிலையில் திருவள்ளூர் மாவட்டம் செங்குன்றம் அருகே ஜே.பி ஜோதி பதுங்கி இருப்பதாக கிடைத்த தகவலை அடுத்து தனிப்படை போலீசார் ஜே.பி ஜோதியை (33) கைது செய்தனர். மேலும் இந்த மோசடி வழக்கில் ஜே.பி ஜோதியின் தந்தை மதுரை(65), மனைவி சரண்யா (25), மற்றும் தம்பி பிரபாகர் (30) ஆகிய நான்கு பேரையும் கைது செய்தனர்.
மேலும் அவர்களிடம் இருந்த கள்ளத் துப்பாக்கி மற்றும் 6 தோட்டாக்களையும் பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நான்கு பேரையும் திருவள்ளூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர்.