‘யானைகளின் உயிரை காப்பாத்துங்க’… எட்டிமடை பகுதியில் முகாமிட்டுள்ள காட்டு யானைகள் ; செவி சாய்க்குமா வனத்துறை..?
Author: Babu Lakshmanan24 November 2022, 11:39 am
கோவை ; கோவையில் ரயிலில் அடிபட்டு யானைகள் அதிகம் இறக்கும் பகுதியில், காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால், அதனை விரட்ட பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
கோவை மாவட்டம் மேற்கு தொடர்ச்சியை மலை ஒட்டி அமைந்து இருக்கிறது. உணவுக்காக வன விலங்குகள் அருகிலுள்ள கிராமங்களில் அடிக்கடி வருவது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மனித, விலங்கு மோதல் ஏற்படுகிறது. ஊருக்குள் வரும் யானைகளை விரட்டவும், அவற்றை கண்காணிக்கவும் வேட்டை தடுப்பு காவலர்கள் பணி செய்து வருகின்றனர்.
தற்போது எட்டிமடை பகுதியில் யானை கூட்டமாக மேய்வதை , அப்பகுதி மக்கள் வீடியோ எடுத்து உள்ளனர். இந்தப் பகுதியில் தான் ரயிலில் அடிபட்டு யானைகள் அதிகளவு இறக்கின்றன. தெற்கு ரயில்வே ரயிலின் வேகத்தை குறைத்தாலும், யானைகள் அடிபடுவது தொடர்ந்து வருகிறது.
யானைகள் உயிரிழப்புக்கு பின், வனத்துறை ரயில்வே தண்டவாளத்தை கடக்க மலையில் இருந்து கீழே இறங்கி வராமல் இருக்க அகழிகள் அமைக்க வேண்டும், அமைக்கப்பட்டு இருந்த அகழிகளை பராமரிக்க வேண்டும், அங்கங்கே மேம்பாலங்களை அமைக்க வேண்டும். இல்லையென்றால் சுரங்கப் பாதை அமைத்து ரயில்களை இயக்க வேண்டுமென அப்பகுதி மக்கள் வனத்துறை மற்றும் ரயில்வே துறைக்கு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.