50 ஆண்டுகள் திராவிட கட்சியைப் பார்த்த இளைஞர்கள்… இப்போது அண்ணாமலைக்கு பின்னால்… பாஜக வளர்ச்சி குறித்து வேல்முருகன் பேச்சு!!

Author: Babu Lakshmanan
24 November 2022, 2:11 pm

புதுக்கோட்டை ; தமிழகத்தில் பாஜக அசுர வேகத்தில் வளர்ந்து வருகிறது என்பதை யாரும் மறுக்க முடியாது என்று தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் வேல்முருகன் தெரிவித்துள்ளார்.

புதுக்கோட்டையில் செய்தியாளர்களை சந்தித்த தமிழக வாழ்வுரிமை கட்சியின் தலைவர் வேல்முருகன் பேசியதாவது :- தமிழக முதல்வர் இரவு பகல் பாராமல் உழைத்துக் கொண்டிருக்கிறார். ஆனால், அரசு அதிகாரிகள் அவருக்கு ஒத்துழைப்பு அளிக்கவில்லை. கடந்த அதிமுக ஆட்சி காலத்தில் இருந்து அதிகாரிகள் தான் தற்போதும் உள்ளனர்.

இவர்கள் அதிமுக ஆட்சியில் இருந்தது போன்று திமுக ஆட்சியிலும் செல்வாக்காக உள்ளனர். இதனால் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் உள்ளது. தற்போது வரை திமுக கூட்டணியில் தான் வாழ்வுரிமை கட்சி உள்ளது, எனக் கூறினார்.

மேலும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று எடப்பாடி பழனிசாமி ஆளுநரிடம் மனு அளித்தது குறித்த கேள்விக்கு அவர் பதிலளித்ததாவது ;- சட்டம் ஒழுங்கு சரியில்லை என்று அவர் எதை கூறுகிறார் என்று கூறினால், அதற்கு தகுந்தாற்போல் பதில் கூற முடியும். அங்குன்றம் இங்கொன்றுமாக நடக்கும் பிரச்சினைகளை வைத்துக்கொண்டு, இவ்வாறு கூறுவது என்பது ஏற்புடையது அல்ல.

பாரதிய ஜனதா கட்சி அசுர வேகத்தில் வளர்ந்து வருவது என்பதை மறுப்பதற்கு இல்லை. மக்கள் மத்தியில் பாஜகவிற்கு என்று ஒரு செல்வாக்கு கடந்த காலத்தை காட்டிலும், தற்போது பெருகி வருகிறது என்பதில் மாற்று கருத்து கிடையாது. திமுக பொதுச்செயலாளர் மட்டுமல்லாது பல்வேறு திமுக நிர்வாகிகளும் பாஜக வளர்ந்து வருவதை மறுக்கவில்லை.

50 ஆண்டு காலம் திராவிட கட்சியை பார்த்த இளைஞர்கள், தற்போது ஒரு ஐபிஎஸ் அதிகாரி தலைமையில் பாஜக நடந்து வருவதால் ஈர்க்கப்பட்டு பாஜகவில் சேருகின்றனர் என்பதற்கு மாற்று கருத்து கிடையாது. எதிர்காலத்தில் சீமான் உடன் அரசியல் களத்தில் இணைந்து பணியாற்றுவதற்கு வாய்ப்பு கிடைத்தால் பார்க்கலாம். எனது முன்னாள் தலைவர் சின்னையா என்று அழைக்கப்படும் டாக்டர் அன்புமணி ராமதாஸ், 2026 இல் முதலமைச்சராக வருவதற்கு வாய்ப்பு கிடைத்தால் முதல் ஆளாக பாராட்டி வரவேற்பேன்.

மத்திய அரசு மற்றும் காங்கிரஸ் ஆகியவை ஆறு பேர் விடுதலை தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் மறுசீராய்வு மனு தாக்கல் செய்தாலும், இவர்கள் விடுதலை செய்ததில் எந்த விதமான மாற்றமும் வரப்போவது கிடையாது. இதேபோன்று விடுதலை செய்யப்பட்ட நான்கு பேர், தற்போது திருச்சி சிறப்பு முகாமில் உள்ளனர். சிறப்பு முகாம் என்பது சிறை தான். ஒரு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்டு, மற்றொரு சிறையில் அவர்கள் தண்டனையை அனுபவிப்பது போன்று அழைக்கப்பட்டுள்ளனர். உடனடியாக, தமிழக முதல்வர் நான்கு பேரையும் விடுதலை செய்வதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

பேசக்கூடாத கருத்துக்களை ஆளுநர் பேசி வருகிறார். காசியில் நடைபெற்று வரும் தமிழ் சங்கமம் என்பது அரசு விழா. அரசு விழாவில் தமிழக முதல்வரை அழைக்காமல் விழா நடத்துவது என்பது கண்டிக்கத்தக்கது. குறிப்பாக, தமிழகத்தில் இருந்து ஆயிரக்கணக்கான மாணவர்களை அழைத்துச் சென்று ஆர்எஸ்எஸ் பயிற்சி அளிப்பது இவர்களின் திட்டமாக உள்ளது. குறைந்தபட்சம் காசியில் நடக்கும் விழாவிற்கு நாடாளுமன்ற உறுப்பினர்களையாவது அழைத்திருக்க வேண்டும், எனக் கூறினார்.

  • BTS Jin Harassment Incident உலகப் புகழ்பெற்ற பாடகருக்கு திடீர் முத்தம்…போலீஸ் கெடுபிடியில் பெண் ரசிகை.!