மக்களே உங்களுக்கான கடைசி வாய்ப்பு : இன்னும் பான் எண் இணைக்கலையா? வருமான வரித்துறை வார்னிங்!!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2022, 12:19 pm
கொரோனா தொற்று பரவல் காரணமாக ஆதார் மற்றும் பான் எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு அவ்வப்போது நீட்டிக்கப்பட்டு வந்தது.
இதையடுத்து ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு கடந்த மார்ச் 31ம் தேதியே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டது.
இதனை தொடர்ந்து ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன்பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டது.
இந்த நிலையில், பான் கார்டுடன் ஆதார் கார்டை இணைப்பதற்கான கடைசி வாய்ப்பை வருமான வரித்துறை அறிவித்துள்ளது.
இதுகுறித்து வருமானவரித்துறை கூறும்போது, வருமான வரிச் சட்டம், 1961 இன் படி, பான் எண்ணை ஆதாருடன் இணைப்பதற்கான கடைசித் தேதி 31.3.2023 ஆகும்.
இது விலக்கு வகையின் கீழ் வராத அனைத்து பான் வைத்திருப்பவர்களுக்கும் பொருந்தும். இல்லையெனில் ஆதாருடன் இணைக்கப்படாத பான் கார்டு செயலிழந்துவிடும். எனவே தாமதிக்க வேண்டாம், இன்றே இணைக்கவும், என்று தெரிவித்து உள்ளது.