பாஜக பிரமுகர் கொலை வழக்கில் பரபரப்பு திருப்பம் : பழி தீர்க்க கூலிப்படைகளை ஏவி கொலை செய்த திமுக பிரமுகர்!!
Author: Udayachandran RadhaKrishnan26 November 2022, 6:46 pm
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம் பட்டி கிரஷர் கம்பெனி அருகே உடலில் வெட்டு காயங்களுடன் நபர் ஒருவர் இறந்து கிடப்பதாக ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது.
விரைந்து சென்ற ஊத்தங்கரை காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டனர்.
விசாரணையில் திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் பாரதிய ஜனதா கட்சியின் நகர துணை செயலாளர் கலி கண்ணன் என்பது அடையாளம் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனைத் தொடர்ந்து ஊத்தங்கரை டிஎஸ்பி அமலா அட்மின் தலைமையில் ஐந்து தனிப்படைகள் அமைக்கப்பட்டு தொடர் விசாரணை மேற்கொண்டதில் சுமார் ஆறு மணி நேரத்திற்குள்ளாகவே கொலையாளிகளை சந்தேகத்தின் பேரில் அடையாளம் கண்டு ஓசூர் பகுதியில் இருந்த அவர்களை கைது செய்தனர்.
தொடர் விசாரணையில் 23.11. 2022 இரவு 10 மணி அளவில் ஸ்கார்பியோ காரில் வந்த நபர்கள் தண்ணீர் கேன் வியாபாரம் செய்து வந்த பாஜக திருப்பத்தூர் நகர செயலாளர் கலி கண்ணன் குடும்ப சொத்து பிரச்சனை காரணமாக தனியாக தண்ணீர் கேன் விற்பனை செய்யும் அலுவலகத்தில் குடியிருந்து வந்த நிலையில் ஸ்கார்பியோ காரில் வந்த மர்ம நபர்கள் கடத்திச் சென்றதாக அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.
ஊத்தங்கரை காவல்துறையினர் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு தகவல் தெரிவித்து அடுத்து விரைந்து வந்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சரோஜ்குமார் தாகூர் தனிப்படைகளை அமைத்து அனைவரையும் தேடி வந்த நிலையில் சட்டம் ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்ற அடிப்படையில் கிருஷ்ணகிரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் டி ஐ ஜி பிரதீப் குமார் அவர்களுக்கு தகவல் தெரிவித்ததன் பேரில் அவரும் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோப்பநாய் உதவியுடன் குற்றவாளிகளை தேடி வந்தனர்.
இந்த நிலையில் திருப்பத்தூர் காவல்துறையினர் ஏற்கனவே குற்ற வழக்குகலில் சம்பந்தப்பட்ட திமுக நகர மாணவர் அணியைச்சேர்ந்த ஹரி என்பவனை சந்தேகத்தின் அடிப்படையில் தேடி வந்தனர்.
தனிப்படை போலீசாருக்கு ஓசூர் பகுதியில் இருப்பதாக தகவல் தெரிவிக்கப்பட்டு விரைந்து சென்ற தனிப்படையினர் ஹரி மற்றும் அவனுடைய கூட்டாளிகள் விக்னேஷ், நவீன் ,மணிகண்டன், அருண்குமார் ஆனந்த் அருள் ஆறு நபர்களையும் கைது செய்தனர்.
ஊத்தங்கரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை மேற்கொண்டதில் இறந்த கலிக்கண்ணனின் அத்தை முறை உறவினர் சாந்தி என்பவருக்கு சொந்தமான 5 சென்ட் காலியிடம் அருகே கலி கண்ணன் வீடு உள்ளது.
சாந்தி தன் 5 சென்ட் நிலத்தை விற்பதாக கூறி ஹரி என்பவரிடம் கடந்த 2016 ஆம் ஆண்டு ஒரு லட்சம் முன்பணமாக பெற்றுள்ளார். உடல் நலக்குறைவால் சாந்தி இறந்து விடவே அந்த நிலம் எனக்கு மட்டும்தான் சொந்தம் என்று உரிமம் கொண்டாடியுள்ளார்.
பணம் தந்த விரக்தியில் ஹரி கலிகண்ணனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் கலிக்கண்ணனின் உள்ளங்கையில் குத்தி விடுகிறார் ஹரி.
இதில் உயிர்த்தப்பிய கலிகண்ணன் போலிஸில் புகார் அளிக்கவே அதன் பேரில் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது. வழக்கு விசாரணை முடிந்து அடுத்த மாதம் தீர்ப்பு வந்தால் குற்றவாளி என்று நிரூபிக்கப்பட்டால் தனக்கு சிறை தண்டனை கண்டிப்பாக கிடைக்கும் என எண்ணிய ஹரி, கலி கண்ணனிடம் சென்று ஐந்து சென்ட் நிலத்தை நீயே வைத்துக் கொள் இனிமேல் எந்த சூழ்நிலையிலும் நான் தலையிடமாட்டேன்.
ஆனால் நீ என் மீது உள்ள வழக்கை வாபஸ் வாங்கிக் கொள்ளுமாறு மிரட்டி உள்ளார். இதனால் கலி கண்ணன் கடந்த 15 நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தன் உயிருக்கு ஆபத்து உள்ளது என்று புகார் மனு அளித்துள்ளார்.
இதை அறிந்த ஹரி தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து கலிகண்ணனை ஊத்தங்கரை அடுத்த வெப்பாலம்பட்டி தனியார் கிரஷர் கம்பெனி அருகில் ஆள் நடமாட்டம் இல்லாத பகுதியில் நெஞ்சு கழுத்து உள்ளிட்ட பகுதிகலில் பலமாக வெட்டி கொடூர முறையில் கொலை செய்ததை ஒப்புக்கொண்டனர்.
கொலைக்கு பயன்படுத்திய ஸ்கார்பியோ கார் மற்றும் கத்தி உள்ளிட்ட ஆயுதங்களை பறிமுதல் செய்துள்ளனர். பிரேதத்தை கைப்பற்றிய ஊத்தங்கரை காவல்துறையினர் பிரேத பரிசோதனைக்காக ஊத்தங்கரை அரசு மருத்துவமனையில் அனுமதி செய்த நிலையில் பிரேத பரிசோதனை செய்து அவரது உறவினர்களிடம் ஒப்படைத்தனர்.
இதையடுத்து ஊத்தங்கரை பாரதிய ஜனதா கட்சியை சார்ந்த நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கொலை செய்யப்பட்ட பாஜக பிரமுகர் என்பதும் கூலிப்படையை ஏவி பழிதீர்த்தது திமுக பிரமுகர் என்பதாலும் திருப்பத்தூர் மற்றும் ஊத்தங்கரை பகுதிகளில் பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியிருக்கிறது.