அரசு மருத்துவமனை என்றால் கேவலமா போச்சா…? கோபத்தில் கொந்தளித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன்..!
Author: Babu Lakshmanan28 November 2022, 1:36 pm
நீட் விலக்கு மசோதாவுக்கு விரைவில் குடியரசுத் தலைவர் ஒப்புதல் அளிப்பார் என்று எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
எம்.எல்.ஏ உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு சைதாப்பேட்டை அரசு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் மற்றும் பரிசு பொருட்களை சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் வழங்கினார்.
மேலும், சைதாப்பேட்டை மேட்டுப்பாளையம் பகுதியை சேர்ந்த பாராதி, தினேஷ்குமார் தம்பதிக்கு பிறந்த பெண் குழுந்தைக்கு நல்ல தமிழ் பெயரை வையுங்கள் என்று அறிவுறுத்திய அமைச்சர், அங்கு புதிதாகப் பிறந்த ஆறு குழந்தைகளுக்கு தமிழ்ச்செல்வி , தமிழ் இனியன், உதயநிதி, தமிழ் இன்பன் என்று தமிழில் பெயர் வைத்து ஆயிரம் ரூபாயை குழந்தைகளுக்கு கொடுத்தார்.
அதனை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன் ;- உதயநிதி பிறந்தநாளை கொண்டாடும் வகையில் நேற்று, நேற்று முன்தினம் இந்த மருத்துவமனையில் பிறந்த 13 குழந்தைகளுக்கு தங்கம் மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடைபெற்று உள்ளது. அடையாறு மகப்பேறு மருத்துவமனையில் பிறந்த 9 குழந்தைகளுக்கும் தங்க மோதிரம் வழங்கப்பட உள்ளது. மேடவாக்கம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் 12 குழந்தைகளுக்கு என மொத்தம் 34 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் வழங்கப்படுகிறது, எனக் கூறினார்.
சீனாவில் கொரோனா அதிகரிப்பு குறித்து கேள்விக்கு பதில் அளித்த அமைச்சர், சர்வதேச விமான நிலையங்களுக்கு வரும் பயணிகளுக்கு 2% ரேண்டம் கொரோனா பரிசோதனை செய்யப்பட்டு, வெப்பமானி மூலம் பரிசோதனை செய்யப்பட்டது. அது தேவையில்லை என்று உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. சீனாவில் இருந்து வரும் பயணிகளுக்கு ஏதாவது கட்டுப்பாடு விதிக்கும் நிலைக் குறித்து ஒன்றிய சுகாதாரத்துறை அமைச்சரிடம் கேட்டு நடைமுறைப்படுத்தப்படும், என்றும் தெரிவித்தார்.
மேலும், பேசிய அமைச்சர், எழும்பூர் குழந்தைகள் நல மருத்துவமனையில் எந்த அலட்சியமும் இல்லை. குழந்தை இறந்தது இயற்கையாக நடந்த ஒன்று. குற்றச்சாட்டை வைத்தால் நமக்கும், எடப்பாடி பழனிச்சாமிக்கும் என்ன வித்தியாசம்..? அரசாங்க மருத்துவமனை என்றால் சாதாரணம் என்று நினைத்து விட்டீர்கள்..? எளிய மக்களுக்கு அனைத்து சேவைகளையும் வழங்கும் இடம், என்றார்.
தொடர்ந்து, நீட் விலக்கு மசோதா குறித்து பேசிய அவர், குடியரசுத் தலைவருக்கு மசோதா அனுப்பப்பட்டது, அதில் சில பதில் கோரி தமிழக அரசிடம் கேட்டனர், அதற்கும் உரிய விளக்கம் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விரைவில் குடியரசு தலைவர் நீட் மசோதாவுக்கு ஒப்புதல் தருவார் என்று எதிர்பார்க்கிறோம், என்று கூறினார்.