சர்ச்சையை கிளப்பிய ‘சகயோக்’… திருப்பூர் ரயில்நிலைய அறிவிப்பு பலகைக்கு கிளம்பிய எதிர்ப்பு.. உடனே ஆக்ஷனில் இறங்கிய அதிகாரிகள்!!
Author: Babu Lakshmanan29 November 2022, 1:28 pm
திருப்பூர் ரயில்நிலையத்தில் இந்தியில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகைக்கு கடும் எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அதிகாரிகள் உடனே நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பூர் ரயில்நிலையத்தை தினமும் ஆயிரக்கணக்கான பயணிகள் பயன்படுத்தி வருகின்றனர். குறிப்பாக, திருப்பூர் தொழில்நகரம் என்பதால் வடமாநிலத்தைச் சேர்ந்தவர்கள் அதிகளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் ரயில் மூலமாக தங்களின் சொந்த ஊர்களுக்கு சென்று வருவது வழக்கம்.
திருப்பூர் ரயில் நிலையத்திற்கு வரும் பயணிகளின் சந்தேகங்களை தீர்த்து வைக்கும் விதமாக, தகவல் மையம் செயல்பட்டு வருகிறது. இதன் வெளியே, ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர், தமிழில் சேவை மையம் மற்றும் ஹிந்தியிலும் எழுதப்பட்டிருந்தது.
இந்நிலையில், புதிதாக அச்சிடப்பட்ட பேப்பர் அறிவிப்பு பதாகை சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்தது கடும் எதிர்ப்பை கிளப்பியுள்ளது. இதில் ஹிந்தி எழுத்துக்களில் சகயோக் என எழுதப்பட்டிருந்தது. அதிக அளவில் வடமாநில தொழிலாளர்கள் வருவதால் அவர்களுக்கு புரியும் வகையில் எழுதப்பட்டிருப்பதாக பலரும் எண்ணிய நிலையில், அதன் மேலே ஆங்கிலத்திலும் சகயோக் எனவும், தமிழ் எழுத்திலும் சகயோக் என அச்சிடப்பட்டிருந்தது தான் சர்ச்சையை உருவாக்கியுள்ளது.
ஆங்கிலத்தில் இன்பர்மேஷன் சென்டர் எனவும், தமிழில் சேவை மையம் என எழுதப்பட்டால் மட்டுமே பயணிகளுக்கு புரியும் என்றும், ஹிந்தியில் சகயோக் என எழுதப்பட்டால் தமிழ் பயணிகளுக்கு என்ன என்பதே தெரியாது என்று குரல்கள் ஒலித்தன. மேலும், இது அப்பட்டமான இந்தி திணிப்பு என புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் எதிர்ப்பு கிளம்பியது.
இதனையடுத்து ரயில்வே அதிகாரிகள் சேவை மையத்தின் முன்பு ஒட்டப்பட்டிருந்த அறிவிப்பு பெயர் பதாகையை அகற்றினர்.