ஆன்லைன் ரம்மி விவகாரம்… அரசியல் விளையாட்டு விளையாடும் அண்ணாமலை ; காங்கிரஸ் குற்றச்சாட்டு
Author: Babu Lakshmanan30 November 2022, 9:20 am
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, அரசியல் விளையாட்டு விளையாடுகிறார் என்று காங்கிரஸ் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் குற்றம்சாட்டியுள்ளார்.
விருதுநகர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக கூட்டரங்கில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் தலைமையில் மாவட்ட வளர்ச்சி ஒருங்கிணைப்பு மற்றும் கண்காணிப்புக்குழு கூட்டம் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் விருதுநகர் மாவட்டத்தில் செயல்படுத்தப்படும் மத்திய அரசின் பல்வேறு திட்டங்கள் குறித்தும் மற்றும் அதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்படுகிறதா என இந்த கூட்டத்தில் ஆய்வு செய்யப்பட்டது. மேலும், மாணவர்களுக்கு வழங்கப்படும் கல்விக்கடன் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மேலும் மத்திய அரசின் திட்டங்களை செயல்படுத்தும் தொடர்புடைய மாவட்ட அளவிலான அனைத்து அலுவலர்களிடம் திட்ட செயல்பாடுகளின் முன்னேற்றம் குறித்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
இந்த கூட்டத்தில் தென்காசி நாடாளுமன்ற உறுப்பினர் தனுஷ் குமார் பந்துப், சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் நகராட்சி தலைவர்கள் மற்றும் ஊராட்சி ஒன்றிய குழுத் தலைவர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
ஆய்வுக்கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் பேசியதாவது:- இந்த ஆய்வு கூட்டத்தில் மத்திய அரசின் திட்டங்கள் குறித்து ஆய்வு செய்யப்பட்டது. மத்திய அரசின் முக்கியமான திட்டங்களில் ஒன்றான கல்விக்கடன் திட்டத்தில் மத்திய அரசின் மெத்தன போக்கால் விருதுநகர் மாவட்டத்தில் மிக குறைந்த அளவிலேயே கல்வி கடன் வழங்கப்பட்டு உள்ளது.
மேலும், காங்கிரஸ் ஆட்சியில் விருதுநகர் மாவட்டத்தில் 120 கோடி ரூபாய் வரை வழங்கப்பட்ட கல்விக்கடன், தற்போது 9 கோடி ரூபாய் மட்டுமே வழங்கப்பட்டு இருக்கிறது என்பது மிகவும் வருத்தத்திற்குரியது. ஏழை, எளிய மாணவர்களுக்கு தொடர்ந்து கல்விக்கடன் வழங்க, வரும் நாடாளுமன்ற கூட்டத் தொடரில் வலியுறுத்தப்படும்.
ஆன்லைன் ரம்மி, ஆளுநர், அண்ணாமலை இந்த மூன்று பேருக்கும் உள்ள இடைவெளியை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆன்லைன் ரம்மி பற்றிய பார்வையை பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சரி செய்ய வேண்டும். ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் ஆளுநருக்கு பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அழுத்தம் தருகிறாரா..? என சந்தேகம் வருகிறது.
ஆன்லைன் ரம்மி தமிழக மக்களுக்கு எதிரானது என தமிழக சட்டமன்றத்தில் அனைத்து கட்சியினர் பேசிய போது, பாஜக மட்டும் ஆன்லைன் ரம்மியை எதிர்த்து பேச வில்லை. ஆன்லைன் ரம்மி, ஆளுநர், அண்ணாமலை ஆகிய மூன்றுக்கும் சம்பந்தம் இருக்கிறதா..? என பார்க்க வேண்டும். பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பொருத்தமட்டில் எப்போதும் உண்மைக்கு புறம்பாக பேசி பழக்கப்பட்டவர்.
ஆன்லைன் ரம்மி விவகாரத்தில் விவகாரத்தில் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அரசியல் விளையாட்டு விளையாடுகிறார். இது தமிழகத்துக்கு எதிரானது, என்றார்.