அடிக்கடி ஏப்பம் ஏற்படுவது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்குமா???
Author: Hemalatha Ramkumar3 December 2022, 6:15 pm
விக்கல், ஏப்பம் போன்றவை ஏற்படுவது சாதாரணமான நிகழ்வுகள் என்றாலும் கூட இவை அடிக்கடி ஏற்படும் போது ஏதேனும் நோயின் அறிகுறியாக இருக்கலாம். அந்த வகையில் அடிக்கடி ஏப்பம் வருவது உங்களுக்கு ஏதேனும் நோயின் அறிகுறியை உணர்த்துகிறதா என்பதை இந்த பதிவின் வாயிலாக தெரிந்து கொள்ளலாம்.
பொதுவாக நாம் உணவு சாப்பிடும் போதும், தண்ணீர் அருந்தும் போதும் காற்றை உடலுக்குள் உள்ளிழுத்துக் கொள்கிறோம். இந்த காற்றை இரைப்பையானது வெளியிடும் ஒரு செயல்முறையே ஏப்பம் ஆகும். இது இயல்பான ஒன்று தான்.
இருப்பினும், இதே நிலை மீண்டும் மீண்டும் ஏற்படுவது ஒரு நோயின் அறிகுறியாக கருதப்படுகிறது. விரைவாக உணவு சாப்பிடுவது, பொறுமை இல்லாமல் தண்ணீர் அருந்துவது போன்றவை இதற்கு காரணமாகும். மேலும் இது மட்டும் இல்லாமல் மசாலா நிறைந்த உணவுகளை அதிகம் சாப்பிடுவது, இரவு நேரத்தில் தாமதமாக உணவு சாப்பிடுவது போன்ற காரணங்களாலும் அதிக அளவில் ஏப்பம் ஏற்படலாம்.
அதிக மசாலா கொண்ட உணவுகளை சாப்பிடும் போது, இரைப்பையில் அதிகப்படியான அமிலத்தன்மை உண்டாகிறது. இதனால் நெஞ்செரிச்சல் ஏற்பட்டு உடனடியாக ஏப்பம் ஏற்படுகிறது. இது செரிமான கோளாறு என்ற நோயின் அறிகுறியாக அமைகிறது. எனவே ஆரோக்கியமான உணவுகளை சாப்பிடுவதன் மூலம் நீங்கள் அதிகப்படியான ஏப்பத்தைத் தவிர்க்கலாம். இதனுடன் கீரை வகைகள், இஞ்சி, சோம்பு மற்றும் சீரகம் போன்றவற்றை அடிக்கடி உங்கள் உணவில் சேர்த்து வர செரிமான பிரச்சனைகள் வராது.