இந்த பிரச்சினை இருந்தா வெந்தயம் சாப்பிடக்கூடாதாம் தெரியுமா???
Author: Hemalatha Ramkumar4 December 2022, 10:36 am
உடல்நலம் சார்ந்த பல பிரச்சனைகளுக்கு வெந்தயம் ஒரு தீர்வாக அமைகிறது என்பதை நாம் அனைவரும் அறிவோம். இருப்பினும் எந்த ஒரு பொருளும் நன்மை மற்றும் தீமை ஆகிய இரண்டையும் கொண்டுள்ளது என்பதை நம்மால் மறுக்க முடியாது. அந்த வகையில் ஒரு சிலருக்கு வெந்தயம் ஆகாது. எனவே அவர்கள் உடல்நலம் கருதி வெந்தயத்தை தவிர்ப்பது நல்லது. யாரெல்லாம் வெந்தயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
அதிக அளவில் வெந்தயத்தை சாப்பிட்டால் உடலுக்கு கேடு விளைவிக்கும். இருமல், வயிற்றுப்போக்கு, உடல் வீக்கம், ஒவ்வாமை மற்றும் வாயு பிரச்சினை உள்ளவர்கள் வெந்தயம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். கர்ப்பிணி பெண்கள் வெந்தயம் சாப்பிடுவதை முற்றிலுமாக தவிர்க்க வேண்டும். ஏனெனில் கர்ப்பமாக இருக்கும் போது வெந்தயம் சாப்பிடுவது வயிற்றுப்போக்கு மற்றும் குமட்டல் போன்ற பிரச்சனைகளை ஏற்படுத்தக்கூடும்.
ஆஸ்துமா மற்றும் மூச்சுத்திணறல் இருக்கும் போது வெந்தயம் சாப்பிட வேண்டாம். வெந்தயமானது நுரையீரலுக்கு ஆரோக்கியமானது என்றாலும் சுவாச மருந்துகள் சாப்பிடும் போது வெந்தயம் சாப்பிடுவது நல்லதல்ல. மருந்துகள் எடுத்துக் கொள்ளாத போது தாராளமாக வெந்தயம் சாப்பிடலாம்.
இரத்த அழுத்தத்தில் பிரச்சினை இருப்பவர்கள் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். வெந்தயமானது இரத்த சர்க்கரை அளவினை குறைப்பதோடு இரத்த அழுத்தத்தையும் குறைக்கும் தன்மை கொண்டது. எனவே நீங்கள் நீரிழிவு நோயாளியாக இல்லாவிட்டால் வெந்தயம் சாப்பிடுவது உங்கள் இரத்த சர்க்கரை மற்றும் இரத்த அழுத்தத்தில் மாற்றத்தை ஏற்படுத்தி விடும். மேலும் இரத்தம் மெலிதலில் பிரச்சினை இருப்பவர்களும் வெந்தயம் சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும். ஏனெனில், வெந்தயம் இரத்தத்தை மெலிக்கும் இயல்புடையது.