தமிழக காங்கிரஸ் தலைவர் கேஎஸ் அழகிரி மாற்றம்? ராஜஸ்தானில் முக்கிய முடிவு… இளம் தலைவர் தேர்வாக வாய்ப்பு?!!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2022, 12:11 pm
தமிழக காங்கிரஸ் தலைவராக கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ம் ஆண்டு நியமிக்கப்பட்டார். அவரது 3 ஆண்டு பதவிக்காலம் முடிவடைந்து 10 மாதங்கள் ஆகி உள்ளது.
இந்த நிலையில் கடந்த மாதம் சத்திய மூர்த்தி பவனில் நடைபெற்ற மோதல் விசுவரூபம் எடுத்தது. 2 வட்டார தலைவர்கள் நியமனத்தில் அதிருப்தி அடைந்த நெல்லை மாவட்ட காங்கிரசார் சத்திய மூர்த்தி பவனுக்கு வந்து அழகிரியிடம் நியாயம் கேட்டனர்.
அப்போது அழகிரி ஆதரவாளர்களுக்கும், ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. ஆதரவாளர்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இந்த மோதல் தொடர்பாக அழகிரி ஆதரவாளரான ரஞ்சன்குமார் மீதும் ரூபிமனோகரன் எம்.எல்.ஏ. மீதும் ஒழுங்கு நடவடிக்கை குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.
தொகுதி நிகழ்ச்சிகள் காரணமாக விசாரணைக்கு வர 15 நாட்கள் அவகாசம் கேட்டார் ரூபிமனோகரன். அதை ஒழுங்கு நடவடிக்கை குழு ஏற்கவில்லை. விசாரணைக்கு ஆஜராகும் வரை கட்சி பதவியில் இருந்து சஸ்பெண்டு செய்யப்பட்டார். ஆனால் ஒழுங்கு நடவடிக்கை குழு எடுத்த நடவடிக்கை தவறானது என்று மாநில பொறுப்பாளர் தினேஷ் குண்டுராவ் சஸ்பெண்டு உத்தரவை நிறுத்தி வைத்தார்.
இதற்கிடையில் முன்னாள் மாநில தலைவர்கள் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், தங்கபாலு, கிருஷ்ணசாமி ஆகியோர் டெல்லி சென்று அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்து அழகிரியை மாற்றும்படி வலியுறுத்தினார்கள். அதே நேரம் 11 எம்.எல்.ஏ.க்கள் கார்கேவிடம் அழகிரிக்கு ஆதரவாக மனு கொடுத்தனர்.
ரூபிமனோகரன் சஸ்பெண்ட் செய்யப்பட்டது. அதை உடனடியாக ரத்து செய்தது தொடர்பாக ஒழுங்கு நடவடிக்கை குழு தலைவர் கே.ஆர்.ராமசாமி, தினேஷ்குண்டுராவ் ஆகியோரை டெல்லி மேலிடம் நேரில் அழைத்து விசாரித்தது.
இப்படி தொடரும் அதிரடி திருப்பங்களால் தமிழக காங்கிரஸ் பிரச்சினையை தீர்த்து வைக்க டெல்லி மேலிடம் முடிவு செய்துள்ளது. ஏற்கனவே கே.எஸ்.அழகிரியின் பதவிக்காலமும் முடிந்து விட்டதால் புதிய தலைவரை நியமிக்கவும் முடிவு செய்துள்ளார்கள்.
புதிய தலைவராக யாரை நியமிக்கலாம் என்பது தொடர்பாக தமிழகத்தை சேர்ந்த மூத்த தலைவர்களிடம் காங்கிரஸ் தலைமை கருத்து கேட்டுள்ளது. முன்னான் மத்திய மந்திரி ப.சிதம்பரம், திருநாவுக்கரசர், தங்கபாலு, ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன், கிருஷ்ணசாமி, சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் செல்வபெருந்தகை ஆகியோரிடம் கருத்து கேட்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொருவரிடமும் தகுதியான 5 பேரின் பெயர் பட்டியலை தயார் செய்து அனுப்பும்படி கேட்டுள்ளனர்.
ஒவ்வொருவரும் அவர்கள் விரும்பும் தலைவர்களின் பெயரை தயார் செய்து அனுப்பி உள்ளனர். மல்லிகார்ஜுன கார்கே நாளை ராஜஸ்தான் செல்கிறார். அங்கு வைத்து தமிழக பிரச்சினையை பேசி முடிவெடுப்பார்கள் என்று கூறப்படுகிறது. அடுத்த சில நாட்களில் புதிய தலைவர் பற்றி அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.