இது திருப்பி கொடுக்கும் நேரம்… யாரை சொல்கிறார் தளபதி விஜய்? வெளியானது வாரிசு படத்தின் இரண்டாவது பாடல்!!
Author: Udayachandran RadhaKrishnan4 December 2022, 5:00 pm
நடிகர் விஜய் வம்சி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்திருக்கிறார். ராஷ்மிகா மந்தனா கதாநாயகியாக நடிக்க சரத்குமார், பிரபு உள்ளிட்ட பலர் படத்தில் நடித்திருக்கின்றனர்.தில்ராஜு தயாரித்திருக்கிறார், தமன் இசையமைத்திருக்கிறார்.
படத்திற்கு ஆந்திர திரைப்பட தயாரிப்பாளர் சங்கம் முட்டுக்கட்டை போட முயல படம் திட்டமிட்டப்படி பொங்கலுக்கு வெளியாகுமா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்திருந்தது.

ஆனால் தடைகளை தாண்டி படம் பொங்கலுக்கு வெளியாவது உறுதியாகியிருக்கிறது. துணிவு படம் பொங்கலுக்கு வெளியாவதால் வாரிசு Vs துணிவு என்ற போட்டி உருவாகியிருக்கிறது.
இதற்கிடையே வாரிசு படத்தின் முதல் சிங்கிளான ரஞ்சிதமே ரஞ்சிதமே பாடல் சமீபத்தில் வெளியாகி ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்றது. பாடலை விஜய்யும், மானசியும் பாட பாடலாசிரியர் விவேக் எழுதியிருந்தார். இதுவரை 75 மில்லியனுக்கும் அதிகமானோர் பாடலை யூட்யூப்பில் பார்த்திருக்கின்றனர்.
இந்நிலையில் படத்தின் இரண்டாவது பாடலான ‘தீ தளபதி’ பாடல் இன்று வெளியாகுமென்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி பாடலானது தற்போது வெளியாகியிருக்கிறது. 30 வருடங்களை நிறைவு செய்திருக்கும் விஜய்க்கு இந்தப் பாடல் சமர்ப்பிக்கப்படுவதாக படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் பாடலை சிம்பு பாடியிருக்கிறார். முதல்முறையாக விஜய்க்கு எஸ்டிஆர் குரல் கொடுத்திருப்பதால் இரண்டு பேரின் ரசிகர்களும் பாடலை கொண்டாடிவருகின்றனர்.
முன்னதாக, தமன் குறித்து பேசியிருந்த வம்சி பைடிபள்ளி, முதல்முறையாக விஜய் படத்துக்கு தமன் இசையமைத்திருக்கிறார். அவர் எவ்வளவு ஈடுபாட்டோடு உழைத்தார் என்பதை நீங்கள் படம் பார்க்கும்போதும், பாடல்களை கேட்கும்போதும் உணர்ந்துகொள்ளலாம் என கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.
குறிப்பாக பாடல் வரிகளில் இது திருப்பி கொடுக்கும் நேரம் என உள்ளதால், பீஸ்ட் படம் தோல்வியனாதை வைத்து எழுதியுள்ளாரா அல்லது வேறு அரசியல் காரணம் உள்ளதா என பாடலாசிரியரை விவேக்கை கேட்டால்தான் தெரியும்.