சீட்டுகளை வாங்கி சீரழியும் மாணவர்கள்… களைகட்டும் சட்டவிரோத லாட்டரி விற்பனை : கைக்கட்டி வேடிக்கை பார்க்கும் காவல்துறை!
Author: Udayachandran RadhaKrishnan7 December 2022, 4:46 pm
நிலக்கோட்டை தாலுகாவில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் அதிக அளவு விற்பனை செய்யப்பட்டுவாதக வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை தாலுகா பகுதிகளான நிலக்கோட்டை, வத்தலக்குண்டு, அனைப்பட்டி, விளாம்பட்டி, கொடைரோடு, பட்டிவீரன்பட்டி ஆகிய பல்வேறு பகுதிகளில் கடந்த சில நாட்களாக பட்டப்பகலில் மக்கள் அதிக நடமாட்டம் உள்ள பகுதிகளில் 24-மணிநேரமும் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் விற்பனை தாராளமாக நடைபெற்று வருகிறது.
இதில் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகளான கேரளா லட்டரிகள் மற்றும் சிங்கம், டியர், தங்கம், குயில், நல்லநேரம், மணி, விஷ்ணு, மயில், மான் உள்ளிட்ட பல்வேறு பெயர்களில் ஆன்லைன் லாட்டரிகள் அதிகளவு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
வத்தலகுண்டில் பொதுமக்கள் அதிகம் கூடும் பஸ் நிலையம், நிலக்கோட்டை பூ மார்க்கெட், பள்ளிகள், மருத்துவமனைகள், டீக்கடை, பேக்கரி உள்ளிட்ட இடங்களில் விற்பனை செய்து வருகின்றனர்.
இந்த லாட்டரிகளை ஆன்லைனில் மூலம் ரிசல்ட் பார்த்து உரியவர்களிடம் தெரியப்படுத்தி வருகின்றனர். தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனையால், இந்த பகுதியை சேர்ந்த பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் லாட்டரி சீட்டுகளை வாங்கி வாழ்க்கையை சீரழித்து வருவதாக புகார் கூறப்படுகிறது.
இதுகுறித்து இந்த பகுதியைச் சேர்ந்தவர்கள் காவல்துறையிடம் தெரிவித்தால், உரிய நடவடிக்கை எடுக்கப்படுவதில்லை என புகார் கூறப்படுகிறது.
தற்போது, நிலக்கோட்டையில் அணைப்பட்டி சாலையில் தடை செய்யப்பட்ட லாட்டரி விற்பனை செய்து வரும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி பரவி பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.