அரசுப் பள்ளியில் பிறந்த குழந்தை…? கழிவறையில் கிடந்த ஆண் சிசு சடலம்… பகீர் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை!!
Author: Babu Lakshmanan9 December 2022, 10:17 am
திருச்சி ; திருச்சி அருகே உள்ள அரசு பள்ளியில் பிறந்து சில மணி நேரங்களிலேயே இறந்த நிலையில் கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை கைப்பற்றி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றன்.
திருச்சி மாவட்டம், திருவெறும்பூரை அடுத்த காட்டூர் பகுதியில் உள்ள அரசுபள்ளி கழிவறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன நிலையில், இறந்த நிலையில் ஆண் சிசுவின் சடலம் கிடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
அதனடிப்படையில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற திருவெறும்பூர் போலீசார், இறந்து கிடந்த ஆண் சிசுவின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும், இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிந்து, பள்ளி வளாகத்தில் உள்ள கழிவறையில் குழந்தை பிறந்ததா..? அல்லது வெளியில் பிறந்த ஆண் சிசுவை பள்ளி கழிவறையில் வீசி சென்றனரா..? என்ற பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தினர். மேலும், தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன.
இதனிடையே, சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆதிதிராவிடர் நலத்துறை தனி தாசில்தார் சந்திர தேவநாதன் மற்றும் பள்ளிக்கல்வித்துறை அதிகாரிகள் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து பள்ளியில் விசாரணை நடத்தினர்.
இதுபோன்ற சம்பவங்கள் பள்ளி வளாகத்தில் இனிமேல் நடைபெறாமல் இருப்பதற்காக பள்ளியில் போதுமான பாதுகாவலர்கள் நியமிக்க வேண்டும் மற்றும் மூன்றாவது கண்ணான சிசிடிவி கேமரா பொருத்த வேண்டும் என்பது பெற்றோர்களின் கோரிக்கையாக உள்ளது.