‘ஒரு ஏக்கருக்கு வெறும் ரூ.8 தான் செலவு’.. விவசாயப் பணிகளை எளிதாக்கும் இயந்திரம் கோவையில் அறிமுகம்

Author: Babu Lakshmanan
9 December 2022, 12:03 pm

கோவை : வேளாண் பணிகளை எளிதாக்கும் வகையில் கோவையில் முழுவதும் பேட்டரியால் இயங்க கூடிய “அக்ரிஈஸி” எனும் விவசாய எந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

டிராக்டர் அட்டாச்மென்ட்ஸ் தயாரிப்பதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனமாக கோவையில் உள்ள புல் மெஷின்ஸ் நிறுவனம் உள்ளது. விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை புகுத்தும் நோக்கத்துடன் இந்த நிறுவனத்தார் “புல் எலக்ட்ரிக்” என்ற நிறுவனத்தை துவக்கி உள்ளனர்.

இந்நிலையில், இந்நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக பல வகை விவசாயப் பணிகளை செயல்படுத்தும் வகையில் பேட்டரியில் இயங்கும் “அக்ரிஈஸி” இயந்திரத்தை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதனை தமிழ்நாடு வேளாண்மை பல்கலைகழக துணைவேந்தர் கீதாலட்சுமி, இந்திய வேளாண்மை ஆராய்ச்சி குழுவின் துணை இயக்குனர் ஜெனரல் ஷ்யாம் நாராயண் ஜா, மத்திய வேளாண்மை பொறியியல் நிறுவனத்தின் இயக்குனர் மேத்தா ஆகியோர் அறிமுகம் செய்து வைத்தனர்.

“அக்ரிஈஸி” இயந்திரம் மின்சாரத்தில் சார்ஜ் செய்து கொள்ளக்கூடிய லித்தியம் பேட்டரியால் இயக்கப்படுகிறது. இந்த இயந்திரம் களை எடுப்பது மட்டுமின்றி, பயிர்களுக்கு மருந்து தெளிப்பது, பளு தூக்ககுவதற்கு மற்றும் பல்வேறு விவசாய பணிகளையும் எளிதாக செய்யும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த இயந்திரத்தை பயன்படுத்தி 10 வேலையாட்கள் செய்யும் பணிகளை ஒரு நபரால் செய்யமுடியும். இந்த இயந்திரத்தை பயன்படுத்தி களை எடுப்பதற்கு ஒரு ஏக்கருக்கு 8 ரூபாய் மட்டுமே செலவாகும். மண்ணின் தன்மையை பொருத்து 5 மாறுபட்ட வேகங்களில் இயக்கக்கூடிய இந்த இயந்திரத்தை, ஒரு முறை சார்ஜ் செய்வதன் மூலம் இந்த 4 மணி நேரம் தொடர்ந்து இயக்கமுடியும்.

இதில் இருக்கும் தெளிப்பான் 33 லிட்டர் கொள்ளளவு கொண்டது. பளுதூக்கும் இயந்திரம் மூலம் சுமார் 80 கிலோ வரை எடையை தூக்க முடியும். இந்த இயந்திரத்தில் மொபைல் சார்ஜிங் வசதி உள்ளது குறிப்பிடதக்கது.

  • kalanidhi maran office 8th floor was locked for many years கலாநிதி மாறன் அலுவலகத்தில் அமானுஷ்யம்? 8 ஆவது மாடியில் அப்படி என்ன இருக்கிறது?